Sunday 19 May 2024

மற்ற மதங்களை மதியுங்கள்!

 

"உங்கள் மதம் பிறரால் மதிக்கப்பட வேண்டுமானால்  முதலில் நீங்கள் பிறரின் மதத்தை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்"

இதனைச் சொன்னவர் நமது  துணைப் பிரதமர், டத்தோஸ்ரீ அமட் ஸாஹிட். சரவாக்,  காவாய் நிகழ்வொன்றில்   இதனை வலியுறுத்தியிருக்கிறார்.

துணைப் பிரதமருக்கு நாம்  நன்றி நவில கடமைப்பட்டிருக்கிறோம். நாமும் இதே கருத்தைத்தான்  காலங்காலமாகச் சொல்லி வருகிறோம்; பேசி வருகிறோம்.

ஆக, சமய நல்லிணக்கம் என்பது அனைவராலும் பிபற்றக்கூடிய  ஒவ்வோருவரின் கடமையாகும்.  தலைவர்கள் அதனை அறிந்திருக்கின்றனர்.  நாட்டில் அமைதி நிலவ சமயமே முக்கிய காரணியாக இருக்கின்றது.

சரவாக்  மாநிலத்தில்  நிலவுகின்ற சமய  ஒற்றுமையையும் துணைப் பிரதமர் பாராட்டியிருக்கிறார்.  அந்த மாநிலத்தில்  சரவாக்கியரிடையே  உள்ள சமய புரிந்துணர்வு  தமக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறியிருக்கிறார். 

ஆனால் நம்மிடையே உள்ள பிரச்சனை எல்லாம்  அரசியல்வாதிகள் தான். அவர்களுக்குச் சமயம் என்பது மக்களின் ஆதரவு பெற  ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர்.  முழுமையான சமய அறிவு இல்லாத  சமுதாயத்தில் அவர்களை எப்படி வேண்டுமானாலும் திசை திருப்பலாம். பிரச்சனை எல்லாம் நாட்டு நலனைப் பற்றி  கவலைப்படாத அரசியல்வாதிகளை வைத்துக்கொண்டு  யார் என்ன செய்ய முடியும்?  பட்டம், பதவி என்று அலைபவர்கள்  நாட்டு நலனைப்பற்றி கவலைப்படப் போவதில்லை.  அரசியல்வாதிகள் சரியாக இருந்தால் மதபோதகர்களைப் பற்றி   அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை. அவர்கள் அடங்கிவிடுவார்கள்.

மலேசிய மாநிலங்களில் சரவாக் மாநிலம் சமய ஒற்றுமையில் ஓர் எடுத்துக்காட்டு.  துணைப் பிரதமர் சொன்னது போல மற்ற மாநிலங்களும் இந்த எடுத்துக்காட்டைப் பின்பற்ற வேண்டும்  என்பது தான் நமது நிலைப்பாடும்.

ஒரு நாட்டின் முன்னேற்றம் சமய ஒற்றுமையில்  தான் அடங்கியிருக்கிறது. நமது நாட்டில் சமயத்தைப் பற்றி, ஒரு காலகட்டத்தில்,  எந்த ஒரு பிரச்சனையும் எழுந்ததில்லை. ஆனால் இப்போது சமயம் தான் அரசியலில் பதவியைப் பிடிப்பதற்கு ஏற்ற  ஆயுதமாக இருக்கிறது!

இதுவும் மாறும்! 

No comments:

Post a Comment