Monday 6 May 2024

மக்களின் போராட்டத்திற்கு வெற்றி!

 

கோலகுபுபாரு  தோட்ட மக்களின் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்ததில்  நமக்கும் மகிழ்ச்சியே.

எல்லாகாலங்களிலும் இந்தியர்களை மடையர்களாக  நினைக்கும் அரசியல்வாதிகளுக்கு இது ஒரு பாடம்.  இந்தியர்கள் என்றாலே எப்படியாவது  மடக்கிவிடலாம் என்று நினைப்பவர்களுக்கு  ஒரு பாடம் கற்பிக்கப்பட்டிருக்கிறது.

அங்கு ஏற்பட்ட பிணக்கு என்பது  பத்து, பதினைந்து வருடங்களுக்கு மேல்  கிடப்பில் போடப்பட்ட வீடமைப்புத் திட்டம் தான்.  சமீபகாலம் வரை அங்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ஜனநாயக செயல் கட்சியைச் சேர்ந்த ஒரு சீனப்பெண்மணி. ஜ.செ.க. ஏழைகளின் நலனுக்கு பாடுபடும்  கட்சி என்று சொன்னாலும்  அவர்கள் ஏன் மௌனம் சாதித்தார்கள்? ஒரே காரணம் அங்கு ஏற்பட்டது இந்தியர்களின் பிரச்சனை.  அதனால் தான் அவர்கள் அதனைச் செயல்படுத்த  எந்த முயற்சியும்  எடுக்கவில்லை.

ஒர் உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஜ.செ.க. சீனர்கள் கட்சி என்பதில் சந்தேகமில்லை.  அவர்கள் சீனர்களின் பிரச்சனைக்குத் தான்  முக்கியத்துவம் கொடுப்பார்கள். நமது அங்கத்துவம் என்பது சும்மா 'பல்லின கட்சி'  என்று  வெளியே காட்டிக்கொள்ளத்தான்!  மற்றபடி  நமக்கு எந்த மரியாதையும் இல்லை! 

இப்போதும் கூட பார்த்தால் சீனர்களின் பிரச்சனைக்கு வாய் திறப்பார்களே தவிர இந்தியர்களின் பிரச்சனைக்கு 'கப்சிப்' அவ்வளவு தான்!

எப்படியோ இந்த வீடமைப்பு திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியவர்,  செயல்படுத்தியவர், வாதாடியவர், போராடியவர்,  என்று எப்படி எடுத்துக் கொண்டாலும் அதற்குக் காரணமானவர் Parti Sosialis Malaysia கட்சியின் திரு.அருட்செல்வன் அவர்கள் தான் என்று ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர்.

                                                        அருட்செல்வன் (PSM)
திரு அருட்செல்வன் நல்ல சேவையாளர் என்பது நமக்குத் தெரியும்.  ஆனால் அவரை நம்மால் ஆதரிக்க முடியவில்லை. எல்லாகாலங்களிலும் ஏமாற்றுபவர்களையே ஆதரித்துப் பழகிவிட்டோம்! அதனை மாற்றிக்கொள்ள  முடியவில்லை! நாம் உயிர்வாழ டத்தோ, டான்ஸ்ரீ, டத்தோஸ்ரீ - இவைகளெல்லாம் தேவை!  மீண்டும் மீண்டும் ஏமாறத்  தயாராக இருக்கிறோமே தவிர, திருந்த தயாராக இல்லை! அது தான் நமது நிலைமை!

எப்படியோ இந்த வெற்றியை அங்குள்ள மக்களுடன் சேர்ந்து  நாமும் கொண்டாடுகிறோம். இனி நமது  போராட்டங்களுக்கு இது ஒரு முன்னுதாரணமாக  இருக்கட்டும்.   ஒன்று  சேர்ந்தால் எதனையும் சாதிக்கலாம் என்பது இந்த நிகழ்வு நமக்குப் புலப்படுத்துகிறது.

வாழ நினைத்தால் வாழலாம்!

No comments:

Post a Comment