Monday 27 May 2024

ஏன் இந்த நிலை? ஆராயுங்கள்!

SPM  பரிட்சையில் தோல்வி என்பது வேறு.  ஆனால் தேர்வே எழுதவில்லை என்பதே வேறு.

ஆமாம்,  சுமார் 10,000 த்திற்கு மேற்பட்ட  மாணவர்கள்  பரிட்சை எழுதவரவில்லை.  அனைவருமே ஏற்கனவே பரிட்சை எழுத  பதிந்து கொண்டவர்கள் தான்.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் நிலைமை வேறு.   கோவிட்-19 பெருந்தொற்றால் பல தடைகள்.  அதனால் மாணவர்கள் பரிட்சை எழுத  வாய்ப்பில்லை என்று ஊகிக்கலாம். ஆனாலும் பெரும்பாலான மாணவர்கள் பரிட்சை எழுதி  இப்போது மேற்கல்விக்கும் போய்விட்டனர்.

பரிட்சை எழுதி தேர்ச்சி அடையவில்லையென்றால்  அவர்கள் தொழிற்கல்வி பயில வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன.  தோல்வி அடைந்தால் கூட இடைநிலைக் கல்வியை முடித்திருப்பதற்கான  அடையாளம்  உண்டு.  ஆனால் பரிட்சையே எழுதவில்லை என்றால் இவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்?  அவர்கள் தவறான பாதையில் போவதற்கான  வழிகள்  நிறையவே இருக்கின்றன.  தீய சக்திகள் அவர்களைச் சுற்றிக் கொண்டிருக்கின்றனர். அவர்களைத் தவறான பாதைகளுக்கு இழுத்துச் செல்ல பலர் காத்திருக்கின்றனர்.

குறிப்பாக கஞ்சா விற்பனை, திருட்டுச் சம்பவங்கள், பணம் வசூல் செய்ய அடியாட்கள் - இவர்கள் ஒரு பக்கம்  யார் எந்த இளைஞன் அகப்படுவான் என்று காத்துக் கிடக்கின்றனர்.  அவர்களுக்கு அவர்கள் வேலைகள் நடக்க வேண்டும். பெற்றோர்கள் கொஞ்சம் ஏமாந்தால்  பிள்ளைகளின் எதிர்காலமே ஒன்றும் இல்லாமல் ஆகிவிடும்.

முடிந்தவரை இந்த மாணவர்களுக்கு மீண்டும் அவர்களின் கல்வியைத் தொடர  பெற்றோர்கள் முயற்சிகளை எடுக்க வேண்டும்.  கல்வி மட்டும் தான் அவர்களுக்குச் சரியான வழியைக் காட்டும்.

அதைவிட  கல்வி அமைச்சு  சரியான  காரணங்களை ஆராய வேண்டும். எவ்வளவு தான் ஏழை மாணவர்களாக இருந்தாலும்  அரசாங்கமும் அவர்களுக்கு உதவி செய்து கொண்டு தான் இருக்கின்றது.  வேறு காரணங்கள் என்னவாக இருக்கும்?  கல்வி அமைச்சு தான் உண்மையை உடைக்க வேண்டும்.

No comments:

Post a Comment