Wednesday 29 May 2024

சமய நல்லிணக்கம் தேவை!

 


"முஸ்லிம்கள் மற்ற மதத்தினரோடு  விட்டுக் கொடுத்து வாழ வேண்டும்  என்பது போல  பிற மதத்தினரும் முஸ்லிம்களோடு விட்டுக் கொடுத்து வாழ்வது  என்பது மிக மிக அவசியம்.  முஸ்லிம்கள் மற்ற மதத்தினரோடு  புரிந்துணவோடும் அக்கறையோடும் பொறுப்போடும் வாழ வேண்டும்  என்பது எப்படி அவசியமோ  அதே போல மற்ற மதத்தினரான  புத்த, கிருஸ்துவ, இந்துக்களும்  இஸ்லாமியர்களோடு  அப்படியே  வாழ்வதும் அவசியம்"  என்று நமது பிரதமர்  ஜப்பானிய பல்கலைக்கழகமொன்றில் ஏறக்குறைய மேற்கண்டவாறு கூறியிருப்பது  மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்று.

எல்லாப் பிரச்சனைகளையும் விட  சமய நல்லிணக்கம் என்பது தான்  ஒரு நாட்டின்  நலனுக்கு மிக நன்மைப் பயக்கும்.   சமய நல்லிணக்கம் இல்லாமல் ஒரு போதும்  நாடு வளர்ச்சியடைய வாய்ப்பில்லை. இனங்களுக்கிடையே  சமய புரிந்துணர்வு இல்லையென்றால்  நாட்டில் அமைதியின்மை தான் நிலவும்.

சமய நம்பிக்கை எந்த அளவு மனிதனுக்கு அவசியமோ  அந்த அளவுக்குச் சகிப்புத்தன்மையும் அவசியம்.  பல நாடுகளில் மத சகிப்புத்தன்மை என்பதே இல்லை.  இஸ்ரேல் - பாலஸ்தீனம் சண்டை என்பது  என்னன்னவோ   பெயரில் சொன்னாலும் அது ஒருவகையில் யூத மதத்தினருக்கும் இஸ்லாமிய மதத்தினருக்குமான சண்டை தான். இலங்கையில் புத்த - இந்து மதத்தினரிடையே சண்டை ஏற்பட்டதின் தொடக்கம்  சமயம் தான்.

அதனால் தான் மதம் சம்பந்தமான பிரச்சனைகள் எழும் போது அது முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்  என்று பல நாடுகள் எச்சரிக்க மணி அடிக்கின்றன.   அதனையும் மீறி பல நாடுகளில் பல சம்பவங்கள் நடந்து விடுகின்றன.

நமது பிரதமரின் கருத்து நம் நாடு மட்டும் அல்ல எல்லா நாடுகளும் அவசியம் பின்பற்ற வேண்டிய கருத்து.  சமயம் என்றாலே சண்டை சச்சரவு என்பது போய் அமைதி, சமாதானம் என்கிற நிலை வரவேண்டும். அதற்கு மக்கள் என்பது போய் குருமார்களே மக்களை வழிநடத்த வேண்டும்.

மதத்தை நம்மால் தவிர்க்க முடியாது. ஆனால் அதனை வைத்து  காசு சம்பாதிக்க நினைப்பதோ,  அரசியல் பதவிகள் பெற நினைப்பதோ  கண்டிக்கத்தக்கது.

இன்று பல நாடுகளில் சமய நல்லிணக்கம்  இல்லாததற்கு அரசியல்வாதிகளே காரணம்.  அவர்களே சமயத் தலைவர்களைத் தூண்டிவிட்டு  மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்துகின்றனர்.

எப்படியோ சமயம் என்று ஒன்று இருக்கும் வரை அரசியல்வாதிகள்  அதனைத்தான் பதவிகளைப் பிடிக்க குறுக்குவழியாகப் பயன்படுத்துவர்.  வேறுவழியில்லை!  நிஜம் அது தான்!

No comments:

Post a Comment