Thursday 23 May 2024

இதற்கு சாத்தியம் உண்டா?

 

ஒருசில விஷயங்களை நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை.

பிரதமர் அன்வாரின் அமைச்சரவையில் ஒரு மாற்றம்.  இந்தியர்களைப் பிரதிநிதிக்க  தமிழ் பேசுபவர்களே பிரதான அமைச்சராக இருப்பார்கள்.  அப்படி ஒரு நடைமுறையை அந்தக்கால அரசியல்வாதிகள்  கடைப்பிடித்து வந்தார்கள்.  அந்த முறை நமக்கும் ஏற்றதாக இருந்தது.

கடைசியாக அமைந்த அமச்சரவையில் ஜ.செ.க. அதனை மாற்றியது. ஒரு சீக்கியரை முழு அமைச்சராக மாற்றியது.  ஜ.செ.க.  இப்போது தமிழர்களை ஓரங்கட்டும் நேரம்.  முடிந்தவரை இப்போது தமிழர்களை அவர்கள் களையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். காரணம் நமது ஆதரவு என்பது பிரதமர் அன்வாரின் கட்சியான பி.கே.ஆர்.  பக்கம் சாய்ந்துவிட்டதாக  அவர்கள் நினைக்கிறார்கள்.

இப்போது நமது  விஷயத்திற்கு வருவோம். சமீபகாலமாக நாம் கேட்கும் அவலக்குரல்:  தமிழ் பேசும் ஒரு இந்தியர் முழு அமைச்சராக  வரவேண்டும் என்பது தான். வருவதில் நமக்கு  ஆட்சேபனையில்லை. வரவேற்கவே செய்வோம்.  

ஆனால் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.   இத்தனை ஆண்டுகள் நாம் யாரைக் குற்றம் சொல்லி வந்தோம்?  அறுபது ஆண்டுகளாக ஒன்றையும் செய்யவில்லை  என்று யாரைப்பார்த்து புலம்புகிறோம்?  அந்த அமைச்சர்கள் அனைவருமே  தமிழ் பேசியவர்கள் அல்லவா!  ஆனால் ஏன் அவர்களால் இந்திய சமுதாயத்தை திருப்தி படுத்த முடியவில்லை?

அவன் தமிழ் பேசுகிறானோ இல்லையோ  அவன் சுயநலவாதியாக இருந்தால்  எதுவும் நடக்காது!  அவர்கள் விட்டுப்போன குடும்பங்களைப் பாருங்கள்.  பணம் இல்லையென்று எவனாவது இளைத்துப் போயிருக்கிறனா?   எல்லாரும் பணத்தில் மிதக்கிறார்கள்!  தலைவன் தனது குடும்பத்தைப் பார்த்தான்.  காரணம் சமுதாயத்தை மறந்தால் தான்  அவன் குடும்பம் கோலாகலமாக, பட்டம் பதவிகளோடு  இந்தப் பூமியில் வாழ்ந்து கொண்டிருக்க முடியும் என்பது அவனுக்குத் தெரியும்!

துணை அமைச்சர்களாக இருப்பவர்களைப்  பாருங்களேன்.  இப்போதே அவர்களுக்குத் தலைகால் புரியாமல் நடந்து கொள்கிறார்கள்!  இவர்களுக்கே சுயநலம் தான்  கண்முன் நிற்கிறது! அப்படியிருக்க  முழு அமைச்சர் என்றால் எப்படியிருக்கும்?  இந்த மித்ராவை வைத்துக் கொண்டு  என்ன ஆட்டம் ஆடுகிறார்கள்?  மித்ரா என்ன செய்கிறது  என்று இப்போதும்  கேள்விகள் எழத்தானே செய்கின்றன?   இவர்களிடம் உள்ள பதில் தான் என்ன?

தொண்டு செய்பவனுக்குத்தான் தொண்டின் அருமை தெரியும். சும்மா  தின்னுவிட்டு ஏப்பம் விடுபவன்  முழு அமைச்சராக இருந்தும் பயனில்லை!  பாதி அமைச்சராக இருந்தாலும் பயனில்லை!  தின்று தீர்த்தவன் எல்லாம் பதவிக்கு வந்தால்  மென்றே தீர்த்துவிடுவான்!

No comments:

Post a Comment