Sunday 26 May 2024

வேறு ஆளே இல்லையா!

 

மெட் ரிகுலேஷன் கல்விக்கான நுழைவுகள் ஆரம்பமாகிவிட்டன.

இனி நமது மாணவர்களின்  நிலை என்ன என்பது பற்றி  யாருக்கும் தெரிய நியாயமில்லை. மெட் ரிகுலேஷன்  கல்லூரிகளையெல்லாம் இரும்பு பூட்டு போட்டு மிகவும் இறுக்கமாக  பூட்டி வைத்திருக்கிறது கல்வி அமைச்சு!  அவர்கள் வாயே திறப்பதில்லை!

மேல்சபையில்  இரண்டு புண்ணியவான்கள்  - இந்திய செனட்டர்கள் -  இதனைப்பற்றி பேசியிருக்கிறார்கள்.  இந்திய மாணவர்களுக்கு, இதற்கு முன்பு முன்னாள் பிரதமர் 2500 இடங்கள் ஒதுக்கியது போல,  இன்றைய அரசாங்கமும்  ஒதுக்க வேண்டும் எனக்  கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

அந்த இரண்டு பெருமகனார்களைத் தவிர்த்து வேறு யாரும் கண்டு கொள்ளவில்லை.   அந்த இரண்டு பேருக்கும் நன்றி!

நாடாளுமன்றத்தில் ஓரளவு இந்திய உறுப்பினர்கள் உள்ளனர். பெரிய எண்ணிக்கை இல்லையென்றாலும்  சுமார் பத்து பேராவது இருக்கத்தான் செய்வர். இவர்கள் அனைவரும்  ஒன்று சேர்ந்து ஒரு குழுவாக ஏன் பிரதமர் அன்வாரை சந்திக்கக் கூடாது?  உங்களுடன் மேல்சபை உறுப்பினர்களையும்  சேர்த்துக் கொள்ளலாமே.

பிரதமரை சந்திப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சனை? எங்களால் முடியாது. ஆனால் நீங்கள்  மக்கள் பிரதிநிதிகள் ஆயிற்றே!  உங்களுக்கு என்ன தடை?  ஒரு தடையும் இல்லையே!  கல்விக்காக, இந்திய மாணவர்களுக்காக, இதைக்கூட உங்களால் செய்ய முடியாதா?  ஒவ்வொரு ஆண்டும்  நமது சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள்  எந்த அளவு  காயப்படுத்தப் படுகின்றனர் என்பதை நீங்கள் அறியாதவர்களா?

இந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்டவே முடியாதா?  இது உங்களுக்கு அசிங்கமாகத் தெரியவில்லையா?   இந்த சமுதாயம் ஒவ்வொரு ஆண்டும் போராட்டங்களையே சந்தித்து வருகிறது.  அதுவும் கல்வி என்றாலே அதிகப்  போராட்டம்.  வெளியே உள்ள மக்கள்,  நாங்கள்,  அதனைக் கண்டு  வெட்கமடைகிறோம்.  ஆனால் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டிய இடத்தில் இருக்கும் உங்களால்  அது பற்றி கவலைப்படுவதாகத் தெரியவில்லையே!

இந்த நேரத்தில் எங்களுடைய கோரிக்கை  இது தான்.  நாடாளுமன்ற உறுப்பினர்கள்  ஒன்று சேர்ந்து, ஒரு குழு அமைத்து, பிரதமரைச் சந்தித்து இதற்கு ஒரு முடிவு காணவேண்டும்.  இனி மேலும்  இந்தப் பிரச்சனையை இழுத்துக் கொண்டே போவது அவமானத்திலும் அவமானம்!

இந்தப் பொறுப்பு இரண்டு செனட்டர்களுக்கும்  மட்டும் உரியதல்ல. அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் உரியது என்பதை அறிக!

No comments:

Post a Comment