Tuesday 21 May 2024

இது கூட பிரச்சனையா?


மாரா கல்லூரியைப்பற்றி  நாம் பெரும்பாலும் அறிந்திருக்கிறோம். நம்மைப் பொறுத்தவரை நாம் அந்தப்பக்கம் தலைவைத்துக்கூட படுப்பதில்லை.  காரணம் அந்தக் கல்லூரியில் மலாய் மாணவர்களைத் தவிர்த்து  வேறு யாருக்கும் இடமில்லை.  

அதனால் நமக்கு ஒன்றும்  வருத்தமில்லை.  அதன் கொள்கை  என்னவென்று  அறிந்து தெளிந்த பிறகு  வருத்தப்பட அவசியம் ஏதும் ஏற்படவில்லை.  

அந்தக் கல்லூரி இப்போது பலகலைக்கழகமாக மாறி பல வருடங்களாகிவிட்டன.  அங்கு இதய சிகிச்சை பெறுவதற்கான ஒரு பிரிவு இப்போது நடைமுறையில் உள்ளது.  ஆனாலும் போதுமான மலாய் மாணவர்களைக் கொண்டிருக்கவில்லை. அதே சமயத்தில் மற்ற இன மாணவர்களுக்கு இதய அறுவை சிகிச்சையில் நிபுணத்துவம் பெற  வேறு வாய்ப்பும் இல்லை.  இந்த நிலையில் அந்தக் கல்லூரி நிர்வாகம்/மலாய் மாணவர்கள்,   மற்ற இன மாணவர்களைச் சேர்ப்பதில்  தங்களது ஆட்சேபனையைத் தெரிவிக்கின்றனர்.  அவர்கள் கோஷமெல்லாம் இது மலாய் மாணவர்களுக்கான கல்லூரி என்று சொந்தம் கொண்டாடுகின்றனர். அவர்களுக்கு நாட்டில் உள்ள பிரச்சனை என்பது தெரியவில்லை. 

இதய அறுவ சிகிச்சைப் பெற பல நூறு நோயாளிகள்  வரிசையில்  நிற்கின்றனர்.  காரணம் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் இல்லை. பயிற்சி பெற அதற்கான வாய்ப்பும் வேறு கல்லூரிகளில் இல்லை.  அந்த நோயாளிகள் சிகிச்சை பெற வெளிநாடுகளுக்குப் போக வேண்டும்  அல்லது சிவலோகம் தான்!

நமக்கு அதில் வருத்தம் தான். நோயாளிகள் அனைவரும் சீனர், இந்தியர்  என்று மாணவர்கள் நினைக்கின்றனர் போலும்.  அதில் மலாய் இனமும் அடங்குவர்  என்பதை அவர்கள் மறந்துவிட்டனர்.  மேலும் மருத்துவ மாணவர்கள் எந்த இன பாகுபாடும் கொண்டிருக்கக் கூடாது என்பது முக்கியம். அது அவர்களுக்குத் தெரியவில்லை என்றால் என்னத்தப் படித்து, என்னத்தக் கிழிச்சு என்னா ஆகப்போகுது?  மருத்துவர்களின் முதல் கடமையே உயிர்களைக் காப்பாற்றுவது தான். ஒருவேளை அவர்கள் தவறாகப் பயிற்றுவிக்கப் படுகின்றனரோ!

என்னவோ சரியான புரிந்துணர்வு  இல்லாத குறை தான்  என்று  நினைக்க வேண்டியுள்ளது!

No comments:

Post a Comment