Tuesday 28 May 2024

பூச்சி கறி மசாலா!

                                      இந்திய தயாரிப்புகள் - மீன் மசாலா தூள்

மீன் மசாலாத் தூள்கள் மூலம் கொஞ்சம் நிம்மதியாக இருக்க வேண்டு மென்றால்  நமது உள்ளூர் மசாலாக்களையே பயன் படுத்துங்கள்.  அது தான் உடம்புக்கு நல்லது.

நமது உள்ளூர் தயாரிப்புக்கள் என்றால் சுகாதார அமைச்சு கொஞ்சம் அதிகமாகவே உரிமை எடுத்துக் கொண்டு  அதனைச் சோதனை செய்ய  இறங்குவார்கள்.  அதனால் உள்ளூர் தயாரிப்புக்கள் , சரியாகச் சோதிக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டுக்கு அனுப்பப்படுகிறது. 

ஆனால் இந்திய மீன் மசாலைகள்  போதுமான சோதனைகள் செய்த பிறகு  பொது மக்களின் பயன்பாட்டுக்கு அனுப்பப்படுகிறதா  என்பது  கேள்விக்குறியே.  காரணம் இந்தப் பிரச்சனையை பினாங்கு பயனீட்டாளர் சங்கம், சுகாதார அமைச்சுக்குப் புகார் செய்த பின்னரே சுகாதார அமைச்சு இந்த  மீன் மசாலைகளுக்குத் தடை விதித்திருக்கிறது!  ஏற்கனவே  ஹாங்கோங், சிங்கப்பூர் போன்ற நாடுகள் இவைகளைத் தடை செய்து விட்டன.  சுகாதார அமைச்சு ஏன் முன்பே தடைசெய்யவில்லை என்பதற்கான  காரணம்  தெரியவில்லை.

ஆனாலும் சுகாதார அமைச்சின் அறிவிப்பின்படி:  எவரஸ்ட் மீன் மசாலை ஒரே முறை  மட்டும் தான், கடந்த ஏப்ரல் மாதத்தில்,  இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றது.  எம்.டி.எச். மசாலை இறக்குமதி செய்யப்பட்டதற்கான எந்தவொரு குறிப்பும் இல்லையென சுகாதார அமைச்சு அறிவித்திருக்கின்றது.

இந்த இரு மீன் மசாலைத் தூள்களிலும் பூச்சிக்கொல்லிகளுக்குப் பயன்படுத்தப்படும் ஒருவகை இரசாயனம் கலக்கப்பட்டிருப்பதாக  பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கண்டுபிடித்து அறிவித்தது.

சுகாதார அமைச்சு இப்போது விற்பனைக்கு இந்த மீன் மசாலைகள்  தடைசெய்யப்பட்டிருப்பதாக அறிவிப்பு செய்திருக்கிறது. அதே சமயம் அதன் விளம்பரங்களையும் தடை செய்திருக்கிறது.

மக்கள் ஏமாந்தால் பூச்சிக்கொல்லியைக் கூட மசாலைத்தூள் என்பார்கள் இந்த வியாபாரிகள்!

No comments:

Post a Comment