Wednesday 13 October 2021

மித்ராவால் நித்திரை இல்லை!

 

மித்ராவைப் பற்றியான செய்திகளை இப்போது நாம் அதிகமாகவே கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

மித்ரா இந்தியர்களுக்கு உதவுகிறதோ இல்லையோ அது பற்றியான செய்திகள் மட்டும் நமக்கு அதிகமாகவே கிடைக்கின்றன! வெறும் செய்திகளால் இந்தியர்களுக்கு எந்த பயனும் இல்லை!

மித்ரா என்று வந்ததும் அதோடு கூட சேர்ந்து வருவது ம.இ.கா. தான். மித்ராவால் பயன்பெறுபவர்கள் ஏதோ ஒரு சில ம.இ.கா.வினர் தான். செடிக் என்று சொன்னாலும்  சரி அல்லது மித்ரா என்று பெயரை மாற்றினாலும் சரி பயன் பெறுபவர்கள் ம.இ.கா. வினர் தான் என்கிற குற்றச்சாட்டு எப்போதும் உண்டு.

ஆனால் அந்த நிதி உதவி ம.இ.கா. வில் உள்ள அடித்தட்டு அங்கத்தினர்களுக்குப் போய் சேர்ந்தால் கூட  நாம் அதனை ஏற்றுக் கொள்ளலாம். அவர்களிலும் பலர் சிறு வியாபாரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.   ஆனால் பயன் பெறுபவர்கள் என்னவோ ம.இ.கா. பெரும் புள்ளிகள்! ஒரு தடவை அள்ளினால் பரவாயில்லை! ஒவ்வொரு தடவையும் அள்ளினால் .? அதனால் தான் ம.இ.கா.வினர் அடிக்கடி இந்த செய்திகளில் அடிபடுகிறார்கள்!   

இப்போது தெருவில் அடித்துக் கொள்ளும் அளவுக்கு மித்ராவைப் பற்றியான செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.   எங்கோ தவறுகள் நடந்திருக்கின்றன.

இந்த நேரத்தில் முன்னாள் துணையமைச்சர் பி.வேதமூர்த்தி சொல்லுவதை நாம் ஏற்றுக் கொள்ளுகிறோம். பிரச்சனையை  இலஞ்ச ஊழல் துறைக்குக் கொண்டு செல்வது தான் உண்மையைத் தெரிந்து கொள்ள ஒரே வழி. இதனை இன்றைய  ஒற்றுமைத்துறை அமைச்சர்  ஹலிமா சாடிக் ஏற்றுக் கொள்ள வேண்டுமே தவிர பொறுப்பைத் தட்டிக் கழிக்கக் கூடாது என்பதே நமது அறிவுரை.

நாம் ஏன் அமைச்சர் ஹலிமாவுக்கு இந்த அறிவுரையை வழங்குகிறோம் எனக் கேள்வி எழும். அவர் சமீபத்தில் மித்ரா நிதிக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கை கழுவிவிட்டார்! அதனைப் பயன்படுத்த எந்த அதிகாரமும் தனது அமைச்சுக்குக்  கொடுக்கப்படவில்லை என்பதாக அவர் கூறியிருந்தார். அப்புறம் என்ன? பிரச்சனை இல்லையே!

இந்தப் பிரச்சனையில் அமைச்சர் ஹலிமா நல்லதொரு முடிவு எடுப்பார் என நம்புகிறோம். அவர் மறுப்பு தெரிவித்தால் அவர் நேர்மையில் நாம் சந்தேகம் கொள்ள நேரிடும்! 

தாழ்ந்த நிலையில் இருக்கும் ஒரு சமூகத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் எல்லாரும் கை வைக்க முடியும் என்றால் "இது என்ன அரசாங்கமா அல்லது கொள்ளைக்கூட்டமா?" என்று தான் நாம் முடிவுக்கு வரமுடியும்!

மித்ரா ஒரு சிலரின் நித்திரையையாவது கெடுக்கும் என நம்பலாம்!

                                                                                                               

No comments:

Post a Comment