Sunday 3 October 2021

சிவாஜியின் பிறந்த நாள்!

 தமிழ் கூறும் நல்லுலகின் மாபெரும் கலைஞன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவருடைய பிறந்த நாள்: (1.10.1928 - 21-7-2001)

                                     நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 
நடிகர் திலகத்தைப் பற்றி பேசாத நபர் இல்லை. எல்லாம் பேசியாகிவிட்டது. ஊடகங்கள் பிரமாதப்படுத்தி விட்டன.  அவர் நடித்த திரைப்படங்கள் தொலைகாட்சிகளில் அமர்க்களப்பட்டுவிட்டன.

போதும் போதும் என்று நினைக்கின்ற அளவுக்கு அவரைப் பற்றியான செய்திகள் வந்துவிட்டன.  ஆனால் இதுவெல்லாம் போதாது. நடிப்புத் துறையைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கு அவர்  ஒரு பல்கலைக் கழகம்.  அவரை மீறி யாரும் திரை உலகிற்கு போய்விட முடியாது.

அவர் நடித்த முதல் திரைப்படம் பராசக்தி. 1952-ம் ஆண்டு வெளியானது. அப்போது எனது வயது 11. அப்போது நானும் அந்த படத்தைப் பார்த்தேன். அவ்வளவு தான். மற்றபடி அந்தப் படம் கூறும் அரசியலை புரிந்து கொள்ளக்கூடிய வயதில்லை. நடித்த நடிகரும் யாரென்று தெரியவில்லை.

ஆனால் இந்த படத்தை மறக்க முடியாதபடி சில சம்பவங்கள் நடந்தன. ஒன்று கிராமபோன். எங்களது பக்கத்து வீட்டுக்காரர்களிடம்  இருந்தது. அப்போது பராசக்தி திரைப்படத்தின் இசைத்தட்டு  வெளியாகி சக்கைப்போடு போட்டுக் கொண்டிருந்தது. அதைப் பலமுறை மீண்டும் மீண்டும் கேட்டு வசனமும் பாடல்களும் கேட்டுக் கேட்டுக் கேட்டு மனதில் பதிவாகிவிட்டது. ஆனால் சிவாஜி முகம் ஞாபகத்தில் இல்லை!  குரல் மட்டுமே ஒலித்துக் கொண்டிருந்தது!

அதன் பின்னர் எனது நண்பர் ஒருவர்  மு.கருணாநிதி எழுதிய புத்தகங்களாகக் கொண்டு வந்து தள்ளினார்! அவர் எழுதிய திரைப்பட கதை-வசன புத்தகங்களைக் கொண்டு வந்தார். இப்படித்தான் மனோகரா, திரும்பிப்பார் போன்ற படங்களைப் புத்தகங்களிலும், இசைத்தட்டுக்களிலும் படிக்க, கேட்க நேர்ந்தது. பராசக்தி படத்துக்குப் பின்னர் நான் பார்த்த சிவாஜி படங்கள்  என்றால் அது பணம், துளிவிஷம் என்று ஞாபகம்.

பராசக்தி படத்தை நான்  அதிகமாக இசைத்தட்டில் கேட்டதால் அந்தப் படத்தின் சிறப்பாக நான் நினைப்பது:  சிவாஜி கணேசன், பாடல்கள், மு.கருணாநிதி.  இந்த மூன்றும் தான்.  அதன் பிறகு இந்தப் படத்தை தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன்.  இப்போது இந்தப் படத்தைப் பார்த்தாலும் ஏதோ ஒரு புதிய படத்தைப் பார்ப்பது போலவே இருக்கிறது! 

பராசக்தி படம் வருவதற்கு முன்னர் ராஜா-ராணி படங்கள் தான் அதிகமாக வெளி வந்தன. இது ஒரு சமூகப்படம். அதே சமயத்தில் தமிழ் நாட்டின் அவல நிலையைப் பேசிய படம். அது தான் அதன் மாபெரும் வெற்றிக்குக் காரணம்.

சிவாஜி மறைந்து விட்டார். ஆனால் அவர் தமிழரின் மாபெரும் சரித்திரம். அது என்றென்றும் மறையாது!

No comments:

Post a Comment