Monday 11 July 2022

வாழ்த்துகிறோம்!

 

               நன்றி: மக்கள் ஓசை

நாம் ம.இ.கா.வினருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.

குறிப்பாக ம.இ.கா.வின் கல்விக்குழுத் தலைவர் டத்தோ நெல்சன் ரங்கநாதன் அவர்கள் செய்த நல்ல செயல்களுக்காகப் பாராட்டப்பட வேண்டியவர்.

காஜாங் இடைநிலைப் பள்ளி ஒன்றில் தமிழ் இலக்கியப்பாட போதிப்பு நிறுத்தப்பட்டதாக சமீப காலங்களில் செய்திகள் வெளியாயின. அது சம்பந்தமாக உலுலங்காட் மாவட்ட கல்வி இயக்குநரைச் சந்தித்து அந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வைக் கண்டிருக்கிறார் டத்தோ நெல்சன் அவர்கள்.

இந்த ஒரு பள்ளியோடு நின்றுவிடாமல் மேலும் சிலாங்கூர் மாநிலத்தில்  வேறு ஏதேனும் பள்ளிகளில் தமிழ்ப்பாடங்களோ அல்லது தமிழ் இலக்கியப் பாடங்களோ நிறுத்தப்பட்டிருக்கின்றனவா அல்லது மறுக்கப் பட்டிருக்கின்றனவா  என்பதையும் அறிந்து அதற்கான நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறோம்.

ம.இ.கா.வைப் பொறுத்தவரை  அதன் கிளைகளுக்குப் பஞ்சமில்லை. எல்லா இடங்களிலும் கிளைகள் இருக்கின்றன.  எந்த ஒரு தகவலையும் மிக விரைவில் பெற்று விட முடியும். டத்தோ அவர்கள் கொஞ்சம் மெனக்கட்டு  இந்த தகவல்களைப் பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலாங்கூர் மாநிலத்தில் எல்லாப் பள்ளிகளிலும் தமிழ் மொழிப்பாடங்கள் வெற்றிகரமாக  நடைபெறுகின்றன என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. அந்த அளவுக்குத் தலைமை ஆசிரியர்கள் பெருந்தன்மை உள்ளவர்களாக இருந்தால்  நமக்கும் பெருமையே.

கல்விக்குழுத் தலைவர் டத்தோ நெல்சன் அவர்கள் கல்விக்குழுத் தலைவர் என்கிற முறையில் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் தமிழ் மொழியின் நிலை என்ன  என்பதை அறிந்திருப்பது அவரது கடமை. காரணம் அவர்தான் ஆளுங்கட்சியின் இந்தியர் பிரிவின் கல்விக்குழுவின்  பிரதிநிதியாக இருப்பவர்.  எல்லாப் பள்ளிகளிலும் தமிழ் மொழி, இலக்கியம் கற்பிக்கப்பட வேண்டும்  என்பதை  அவர் தான் உறுதி செய்ய வேண்டும்.

பத்திரிக்கையில் செய்தி வரவேண்டும், மக்கள் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் அதன் பின்னர் தான் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்  என்பது இந்தக் கால நடைமுறைக்கு ஏற்புடையதல்ல.  கல்விக்கென்று ஒரு குழு இருக்கும் போது  அவர்கள் தான் கல்வி தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும். மெட் ரிகுலேஷன், பலகலைக்கழகம் போன்ற அனைத்துப் பிரச்சனைகளுக்கும் அவர்களால் தான் தீர்வு காண  முடியும். அவர்களால் தான் சம்பந்தப்பட்டவர்களைச் சந்தித்துப் பேச முடியும். தீர்வு காணும் இடத்தில் நீங்கள் தான் இருக்கிறீர்கள். ஆளுங்கட்சியில் இருப்பதற்கு அது தானே காரணம்!

டத்தோ நெல்சன் அவர்கள் இந்தியர்கள் எதிர்நோக்கும் கல்வி பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் இடத்தில் இருக்கிறார். 'எங்களை வந்து பார்த்தால் தான் தீர்வு காண முடியும்' என்கிற மனப்போக்கு' அவசியமற்றது. அது உங்களுக்கு பலன் அளிக்காது.

டத்தோ நெல்சன் அவர்களும் ம.இ.கா.வும் தொடர்ந்து மக்கள் பணியாற்ற வாழ்த்துகிறேன்!

No comments:

Post a Comment