Wednesday 13 July 2022

உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்!

 

          
இதைத்தான் நாம் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறோம்.

நாட்டில் பிரச்சனைகள் ஏற்படும் போது  பிரச்சனைகளின் முன்னணியில் நாம் தான் நிற்கிறோம்.

மேலே படத்தில் காணப்படும் திருமதி கிரேஸ் எட்வர்ட்   தான் வசித்து வந்த வீட்டின்  வாடகையைக் கட்ட முடியாமல், தனது குடும்பத்தோடு, வெளியேற்றபட்டிருக்கிறார். கடந்த சில தினங்களாக அவரும் அவரது கணவர், ஆறு வயது மகன் மூவரும் தங்களது பழைய காரில்  இரவு நேரத்தைக் கழித்து வருகின்றனர்.

கணவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட விபத்தினால்  நீண்ட நேரம் வேலை செய்ய முடியாத நிலை. அவரின் வருமானம்  குடும்பத்திற்குப் போதுமானதாக இல்லை.  திருமதி கிரேஸ் அவர்களின் தாயார் மருத்துவமனையில் இருப்பதால் அவரால் வேலைக்குப் போக முடியவில்லை.  இப்போது அவரது மகனையும்  பள்ளிக்கு அனுப்பமுடியவில்லை.   சாப்பாட்டுக்கும் வழியில்லை. 

இப்போது அவரின் நிலைமை என்ன? அவரே சொல்லுகிறார்:  "இப்படி ஒரு நிலை எங்களுக்கு  ஏற்படும்  என்று கற்பனை கூட செய்ததில்லை" என்று குமுறுகிறார் கிரேஸ்.

இதைத்தான் நமது மக்களுக்கு அடிக்கடி ஞாபகப்படுத்துகிறோம்.  நிலைமை ஒரே மாதிரி எப்போதும் இருப்பதில்லை. ஏற்றத்தாழ்வுகள் இல்லாத வாழ்க்கை இல்லை. ஏற்றம் இருக்கும் போது கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டும். அப்போது தான் தாழ்வு ஏற்படும் போது அதனைச் சரி செய்ய முடியும். ஆனால் நாம் பார்ப்பதென்ன? நம்மிடம் அடக்கம் என்பதே இல்லை. பணத்தின் மீது நமக்கு எப்போதுமே அலட்சியம். 'எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளலாம்' என்கிற அலட்சியம் நம் சமுதாயத்தினரிடையே மிக மிக அதிகம்.  அதுவும் குறிப்பாக தமிழர்களிடம்.  தேவையற்ற முறையில் பணத்தை வீணடிப்பதில் நாம் தான் முன்னணியில் நிற்கிறோம்.

ஒருவன் செலவு செய்வதில் சிக்கனம்  காட்டினால் அவனைக் கஞ்சன் என்று  முத்திரைக் குத்துகிறோம். அது அவனது பணம்.  அவனுக்கு என்ன தேவையோ  அப்படியே அவன் செலவு செய்துவிட்டுப் போகட்டும் என்று நாம் இருப்பதில்லை. அவனை ஏன் கஞ்சன் என்று சொல்ல வேண்டும்?  அதைவிட சிக்கனக்காரன் என்று சொல்லலாமே!

ஒன்றை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். சிக்கனம் உள்ளவன் தான் தனது பிள்ளைகளைப் பட்டதாரியாக்குகிறான். மருத்துவர் ஆக்குகிறான்.  என்சியனர் ஆக்குகிறான். நல்ல கல்வியைக் கொடுக்கிறான். சொந்த வீடு வைத்திருக்கிறான். சொந்தக் கார் வைத்திருக்கிறான். இவைகளெல்லாம் சிக்கனத்தால் நாம் பெருகின்ற ஆதாயங்கள்.

நாம் மீண்டும் மீண்டும் சொல்லுவதெல்லாம் பணம் உங்களுடையது. அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை நீங்கள் தான்  முடிவு செய்ய வேண்டும். நீங்கள் சிரமத்தை  எதிர்நோக்கும் போது  மற்றவர்கள் உதவுவார்கள் என்று எதிர்ப்பார்க்க முடியாது.

திருமதி Grace Edward குடும்பத்தினருக்கு உதவ வேண்டும் என்று நீங்கள் நினைத்தால்:   Send a WhatsApp Message to Free Malaysia Today's  Helpline at 019-3899839. Please do not call.

வருகின்ற காலங்களில் நம்மையே நாம் காப்பாற்றிக் கொள்ள அனைத்தையும் செய்வோம். 

                                                                                                        

No comments:

Post a Comment