Tuesday 19 July 2022

மகிழ்ச்சியான மலேசியர்கள்!

 

மலேசியர்கள் பொதுவாக மகிழ்ச்சியாகவே வாழ்கின்றனர் என்று புள்ளியியல் துறையின் அறிவிப்பு நம்மைக் கொஞ்சம் அதிர்ச்சுக்குள்ளாகிறது என்பது  உண்மை தான் என்றாலும் அதைத்தான் நாம் நம்பவேண்டியுள்ளது!

அதுவும் சென்ற 2021-ம் ஆண்டு பல வேதனைகள், சோதனைகளிலிருந்து மீண்டு வந்திருக்கிறோம். நாட்டில் வேலை இல்லாத பிரச்சனை, வேலைக்குப் போக முடியாத பிரச்சனை,  வியாபார நிலையங்கள், தொழிற்சாலைகள் திறக்க முடியாத நிலை - இப்படி தொடர்ந்தாற் போல  அதிகமான பிரச்சனைகளை எதிர்நோக்கிய ஆண்டு சென்ற ஆண்டு. இந்த நிலையில் மலேசியர்கள் எப்படி மகிழ்ச்சிகரமாக வாழ முடியும் என்கிற கேள்வி எழத்தான் செய்கிறது. 

ஒரு வேளை இந்த புள்ளிவிபரம் அரசாங்கத்தில் பணிபுரிபவர்களை வைத்து எடுக்கப்பட்ட ஒரு ஆய்வு நடவடிக்கையா அல்லது தனியார் துறையும் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறதா என்பதையும் யோசிக்க வேண்டிய சூழலில் நாம் உள்ளோம். அரசாங்கத்தில் பணிபுரிபவர்கள் என்றால் இந்த ஆய்வு சரியாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அரசாங்கத்தில் பணிபுரிபவர்கள் மட்டும் தான் தங்களது சம்பளத்தை முழுமையாகாப் பெற்றவர்கள். அவர்களுக்கு வழக்கம் போல அனைத்தும் கிடைத்து வந்தன. அதனால் வங்கிக்கடன், வீட்டுக்கடன்,  வாகனக் கடன் என்று எதை எடுத்துக் கொண்டாலும் அவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் ஏற்படவில்லை. அவர்களுக்கு  இலவச உணவு பேக்கெட்டுகள் தேவைப்படவில்லை. 

அரசாங்க ஊழியர்கள் நிச்சயமாக, பொருளாதார ரீதியில்,   எந்த ஒரு துயரத்தையும் அனுபவிக்கவில்லை.  இந்த மகிழ்ச்சி குறியீட்டின் படி  அரசாங்க ஊழியர்கள் தான்  "மகிழ்ச்சி மலேசியர்கள்"  என்பதை ஏற்றுக் கொள்ளலாம்.

ஆனால் தனியார் துறையில் பணிபுரிபவர்கள்  நிலையோ வேறு. வேலை இல்லை  அதனால் சம்பளம் இல்லை!  சம்பளம் இல்லை அதனால் வீட்டில் சாப்பாடு இல்லை. கணவன்  -  மனைவி இருவருக்கும் வேலை இல்லை அதனால் வங்கிக் கடன்களைக் கட்ட முடியவில்லை. இது தான் அரசாங்கத்திற்கு வெளியே வேலை செய்பவர்களின் நிலைமை!  இலவச உணவு பேக்கெட்டுகள் இவர்களுக்குத்தான் தேவைப்பட்டது. இந்த நிலையில் எப்படி அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியும்?

அப்போது ஏற்பட்ட அந்த அடி தான் பலர் வீட்டுக்கு வாடகை கட்ட முடியாமல் வெளியேற்றப்பட்டனர். பலர் வீதிக்கு வந்தனர். தற்கொலை செய்து கொண்டவர்களும் இருக்கின்றனர். இப்பவும் அந்த பாதிப்பு இருக்கத்தான் செய்கிறது.

மலேசியர்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதில் நம் அனைவருக்குமே அக்கறை உண்டு. சென்ற ஆண்டில் வேதனையையே அதிகம் அனுபவித்த மலேசியர்கள்  மகிழ்ச்சியை எப்படி அனுபவத்திருக்க முடியும் என்பது தான் புரியாத புதிராக இருக்கிறது.

ஆனால் மகிழ்ச்சி என்பது ஓர் மனநிலை. ஒரு வேளை மலேசியர்கள் "இடுக்கண் வருங்கால் நகுக" என்பதைக் கடைப்பிடிப்பவர்களோ? அப்படியென்றால் நமக்கும் மகிழ்ச்சியே!

No comments:

Post a Comment