Monday 25 July 2022

யார் ஏழை?

 


நாம் ஏழ்மையில் வாழலாம். கையில் காசில்லாமல் தடுமாறலாம். 

இதனாலெல்லாம் நாம் ஏழைகள் என்பதாக நமக்கு நாமே ஏழைகள் என்று சொல்லிக் கொண்டும் வாழ்ந்து கொண்டும் இருக்க வேண்டிய அவசியமில்லை.

அது உண்மையாகவே  இருக்கட்டும். அதற்காக நாம் ஏழைகள் என்று தண்டோர போட்டு ஊரைக் கூட்ட வேண்டும் என்கிற சில்லறைத்தனமாக நடந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.

நாம் ஏழையாகவே பிறந்திருக்கலாம். அது ஒன்றும் பெரிய பிரச்சனை அல்ல. நாம் எப்போது வேண்டுமானாலும் நமது வாழ்க்கையை நாம் மாற்றியமைத்துக் கொள்ளலாம். அது நமது கையில் தான் உள்ளது.

முக்கியமாக நாம் கருத்தில் கொள்ள வேண்டியது ஒன்று தான். ஏழ்மைக்கும் நாம் வாழ்கின்ற வாழ்க்கைக்கும் சம்பந்தமில்லை.  நாம் மனம் வைத்தால் எப்போதும்  மனத்தால் பணக்காரனாகவே  வாழ முடியும். 

மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்களோ அது நம்மைப்பற்றிய அவர்களது பார்வு. ஏழை என்று நினைக்கலாம். பரம ஏழை என்று நினைக்கலாம். அவர்கள் எப்படியோ நினைத்துவிட்டுப் போகட்டும்.

ஆனால் அவர்களைவிட, பணம் என்பதைத் தவிர,  வேறு வழிகளில் நாம் அவர்களைவிட  பணக்காரர்களாக, செல்வந்தர்களாக இருக்கலாம். ஆமாம் பணம் என்றால் வெள்ளி நோட்டுக்கள் மட்டும் தானா?  நமது அறிவு, ஆற்றல், உடல்நலம் - இப்படி அனைத்துமே பணம் தான், சேல்வம் தான்   ஒரு சில இடங்களில் பணம் கொட்டிக் கிடக்கும் ஆனால் அங்கே ஒரு வேளை சோறு கூட சாப்பிட முடியாமல் உடல்நலம் கெட்டுக் கிடந்தால்  அந்தப் பணத்தையா சாப்பிட முடியும்? இதையெல்லாம் நாம் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம்!

இங்கு நமது பார்வை  என்பது நாம் நம்மை எப்படிப் பார்க்கிறோம் என்பது தான். இப்போது, இந்த நிமிடம் என்னிடம் போதுமான பணம் இல்லை என்பது உண்மைதான். ஆனால் நான் ஏழை அல்ல. இதோ நான் ஒவ்வொரு நிமிடமும் எனது உயர்வுக்காக, எனது குடும்பத்தின் உயர்வுக்காக உழைத்து வருகிறேன்.  ஒவ்வொரு நிமிடமும் உயர்ந்து வருகிறேன். இந்த ஏனது உழைப்பு நாளையே என்னை உயர்த்தும். நான் ஏழை அல்ல என்பதைக் காட்டும்.

இப்படி ஒவ்வொரு நிமிடமும் உயர்ந்து வரும் என்னை, நான் எப்படி ஏழை என்பதை ஏற்றுக்கொள்வது?

ஏழ்மை என்பது ஒரு மனநிலை. அதனை நாம் எப்படி வேண்டுமானாலும்  மாற்றிக் கொள்ளலாம். ஏழை என்று நினைத்தால் வாழ்நாள் முழுவதும் ஏழை தான். எந்தக் காலத்திலும் உயர வழியில்லை! நான் ஏழை அல்ல என்று நினைத்தால் நாம் ஏழையே அல்ல. முன்னேற்றத்திற்கான பாதைகளும் திறக்கும்.

நாம் ஏழை அல்ல! அது போதும்!

No comments:

Post a Comment