Thursday 21 July 2022

அரசாங்கத்திற்கும் சிக்கனம் தேவை!

 

விலைவாசி ஏற்றம் நமது எதிர்பார்ப்பையும் மீறிவிட்டது!  இன்னும் ஏறிக்கொண்டே போகிறது!

உலகளவில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தினால் இதெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது என்பது தான் நமது அரசாங்கம் கூறுகின்ற காரணங்கள். அரசாங்கத்தில் இன்னொரு தரப்பும் இருக்கின்றது. இவர்கள் கூறுகின்ற காரணங்கள் "எல்லாம் இறைவான் செயல்!"  என்று கூறி தங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று கைகழுவி விடுவார்கள். இவர்கள் பெரும்பாலும் மூச்சு மூட்ட தின்றுவிட்டுப் பேசுபவர்கள்! உண்மையில் இவர்களுக்கும் விலைவாசிக்கும் சம்பந்தமிருக்காது!

இதனையொட்டி சமீபத்தில் தலைநகரில் விலைவாசி உயர்வைக் கண்டித்து அமைதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆனாலும் இந்த அமைதி ஆர்ப்பாட்டத்திற்குக் கூட  காவல்துறையினர் அனுமதி கொடுக்கவில்லை. காவல்துறை என்னும்போது அவர்கள்  பிரதமர் சொல்லுவதைத் தான் கேட்பார்கள். அவர்களுக்கு உத்தரவு எங்கிருந்து வருகிறதோ அதைத்தான் -  அந்த உத்தரவுக்குத்தான் அவர்கள் பணிவார்கள். ஆக அரசாங்கம் மக்களின் கருத்தைக் கேட்கும் என்கிற நிலை இல்லை. அரசாங்கம் தன்னிச்சையாகவே செயல்படுகிறார்கள் என்பது தான் உண்மை.

இந்த இக்கட்டான நேரத்தில் கூட அரசாங்கம்  கோடிக்கணக்கான பெறுமானமுள்ள ஒரு சில  திட்டங்களை நிறைவேற்றுவதற்காக முயற்சிகளை  செய்தும் கொண்டிருக்கிறது.   பெரும் பெரும் திட்டங்களை நிறைவேற்ற இது சரியான தருணம் அல்ல என்று எதிர்க்கட்சிகள் எதிர்த்தாலும் அரசாங்கம் அதனைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. ஒன்று மட்டும் நமக்குத் தெரிகிறது. யாரையோ திருப்திப்படுத்தும் வேலையில் பிரதமர் நெருக்கப்படுகிறார் என்பது மட்டும் தெரிகிறது!

இன்னொரு கோரிக்கையையும் இந்த அமைதிப் பேரணியில்  முன்மொழியப்பட்டிருக்கிறது. அமைச்சர்கள், துணை அமைச்சர்கள்  இவர்களின் சம்பளம் குறைக்கப்பட வேண்டும் என்பது தான் அந்த கோரிக்கை. இதற்கு மறுப்பு சொல்ல எந்த நியாயமும் இல்லை.

இன்று மலேசியர்கள், அரசாங்கப் பணியாளர்களைத் தவிர்த்து,  மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர். குடும்பங்களில் இருவருக்கு வேலை என்பது போய் ஒருவர் மட்டும் வேலை என்கிற நிலை பல குடும்பங்களில்  இன்று உண்டு. இந்த நிலையில் வங்கிக்குப் பணம் கட்ட முடியாமல் வீடுகளை இழந்து விட்டவர்கள் பலர். சாமானிய, நடுத்தர குடும்பங்கள் பலர் வீதிக்கு வந்துவிட்டனர்.

இந்த நிலையில் அமைச்சர்கள், துணை அமைச்சர்களின் குடும்பங்கள்  இன்றளவும் வெளிநாடுகளுக்குச் சென்று 'ஷோப்பிங்' செய்கின்ற பழக்கத்தை விடவில்லை!  அது தவறு என்று நாம் சொல்ல வரவில்லை. ஆனால் அவர்களும் மலேசியர்களோடு சேர்ந்து சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று தான் சொல்லுகிறோம். அவர்கள் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. அவர்களால் அது மூடியாத காரியம்.

அமைச்சர்கள் பல இலவசங்களை அனுபவிக்கின்ற நிலையில் அவர்களுடைய சம்பளம் மாதம்  நான்காயிரம் வெள்ளியாக நிர்ணயிக்கலாம்.  இப்படிச் செய்வதால் பல இலட்சங்களை அரசாங்கம் மிச்சம் பிடிக்க முடியும். அமைச்சர்கள் என்று சொல்லும் போது அமைச்சர்கள் அந்தஸ்த்தில் பலர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். அரசு சார்ந்த நிறுவனங்களில் அமைச்சர்களுக்கு ஈடாக சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் அனைவரும் இதில்  அடங்குவர்.

சிக்கனம் எல்லாப் பக்கமிருந்தும் வரவேண்டும். பொது மக்களுக்கு மட்டும் தான் என்கிற நிலை மாற வேண்டும். அரசாங்கமும் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்  

விலைவாசி உயர்வு என்பது அனைவருக்கும் தான்! ஏழை எளியவர்களுக்கு மட்டும் அல்ல!

No comments:

Post a Comment