Monday 4 July 2022

இரண்டுமே சரியில்லே!

 

முன்னாள் பிரதமர்கள், நஜிப் - முகைதீன் - இருவருமே  பேசி வருகின்ற சில விடயங்கள்  நாட்டு நலனுக்கு ஏற்றதாக இல்லை என்று தாராளமாகச் சொல்லலாம்!

முகைதீன் யாசின் இந்த நேரம் பார்த்து தங்கள் கட்சிக்கு துணைப் பிரதமர் பதவி வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்! அதன் நோக்கம் தங்கள் பக்கமிருக்கும்  உறுப்பினர்கள் யாரும் கட்சி மாறிவிடக் கூடாது என்பது தான். மற்றபடி பெரிய கொள்கைகளோ, இலட்சியங்களோ எதுவுமில்லை! அப்படியே இருந்தாலும் புதிய பதவிகளை உருவாக்கிக் கொண்டே போவதற்கு இது ஏற்ற தருணமும் இல்லை.

இதற்கு முன்பு சில காலம் பிரதமராக இருந்திருக்கும் முகைதீனுக்குத்  தெரியாதது ஒன்றுமில்லை. விலைவாசி ஏற்றம் மக்களின்  கழுத்தை நெருக்குகின்ற இந்த நேரத்தில் கூட  பதவிகளைக் கேட்கும் நபர் என்றால் அது இவர் ஒருவர் தான்.  மக்களின் துயரம் இவருக்குத் துயரமாகத் தெரியவில்லை!  நல்ல வேளை இவர் நீண்ட காலம் பிரதமராக இல்லை! அது மக்கள் செய்த புண்ணியம்!

இன்னொரு பக்கம் நஜிப் துன் ரசாக். இப்போதெல்லாம் இவருடைய குரல் அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கிறது! ரொம்பவும் புத்திசாலித்தனமாக பேசுகிறார்! எல்லாருக்குமே இப்போது இலவச ஆலோசனைகள அள்ளிவிட்டுக் கொண்டிருக்கிறார்!  அவருடைய ஆட்சி காலத்தில் யாருடைய ஆலோசனைகளையும் கேட்காததின்  விளைவு தான் இப்போது அப்படி ஒரு பக்குவத்தை அவருக்குக் கொடுத்திருக்கிறது!

நஜிப் ரசாக்கும் முகைதீனுக்கு வழக்கம் போல தனது ஆலோசனையைக் கொடுத்திருக்கிறார். பதவிகளைக் கேட்க வேண்டிய நேரம் இதுவல்ல. தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில்  பதவிகள் தேவையற்றது என்கிறார்!

நஜிப் இப்படிக் கூறினாலும் இன்னொரு பக்கம் அவர் மற்றவர்களைத் தூண்டிவிட்டு  சீக்கிரம் தேர்தல் நடத்த அரசாங்கத்திற்கு  நெருக்குதல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்! அதுவும் அவருக்குள்ள நெருக்கடி தான் காரணம்! அவருக்குச் சிறைத்தண்டனை ஏற்கனவே கொடுத்தாகிவிட்டது! ஆனாலும் இன்னும் வெளியே இருக்கிறார். அம்னோ அரசாங்கம் அமைய வேண்டும் என்னும் எதிர்ப்பார்ப்பில் இருக்கிறார். அப்படி அமைந்தால் எல்லாக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் தமக்கு விடுதலை கிடைக்கும்  என நினைக்கிறார்!

ஆனால் இருவருமே ஒன்றை மறந்து விட்டார்கள். மக்களுக்குத் தேர்தலும் வேண்டாம் அமைச்சரவையை விரிவு படுத்தவும் வேண்டாம். முதலில் விலைவாசிகள் ஏற்றத்திற்கு ஒரு முடிவைக் காணுங்கள். அரசாங்கம் இதற்குத்தான் முதலிடம் கொடுக்க வேண்டுமே தவிர அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுப்பது இமாலயத் தவறு என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய நிலையில் மக்களுக்குத் தரமான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பது  அரசாங்கத்தின் கடமை.

நாம் சொல்லுவதெல்லாம் மக்களின் வாழ்க்கை முக்கியம். அந்த இருவரையுமே புறந்தள்ளுங்கள்  என்பது தான்!

No comments:

Post a Comment