Sunday 3 July 2022

அமைதி ஆர்ப்பாட்டங்கள்!


 இன்றைய நாள்களில் மக்கள் தங்களது பிரச்சனைகளை அரசாங்கத்திற்குக் கொண்டு செல்ல அமைதியான ஆர்ப்பாட்டங்களை அல்லது ஊர்வலங்களை  அனுமதிக்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.

எல்லாவற்றுக்கும் தடை தடை என்றால் மக்கள் தங்களது பிரச்சனைகளை எங்கு கொண்டு செல்வார்கள்?  ஆர்ப்பாட்டாளர்கள் யாரும் வன்முறையை ஆதரிப்பவர்கள் இல்லை. பல இடங்களில் நாம் பார்ப்பதெல்லாம்  ஆளுங்கட்சியினரே வன்முறையைத் தூண்டிவிட்டு பின்னர் ஆர்ப்பாட்டுக்காரர்களின் மீது பழியைப் போட்டு விடுகின்றனர்! இது எப்போதுமே நடப்பது தான். 

ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் அரசாங்கத்தின் மீது பழிபோட வேண்டும் என்கிற நோக்கம் கொண்டவர்கள் அல்ல. தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்த அதனை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அவர்கள் மீது தான் எப்போதுமே நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.  போலிஸார் ஆளும் தரப்பினர் மீது கைவைப்பதில்லை!எல்லா நாடுகளில் இப்படித்தான் நடக்கிறது! இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை!

சரி,  இன்றைய நிலைமை என்ன? இன்றைய நாளிதழ்களில் பலர் பலவிதமாக தங்களது கோபங்களை வெளிப்படுத்துகின்றனர். தலைவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் அனைவருமே தங்களது ஆத்திரங்களைக் கொட்டுகின்றனர். யார் என்ன செய்ய முடியும்? விலைவாசிகளின் ஏற்றத்தின் போதே மக்கள் அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டுவந்துவிட்டனர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னரே விலைவாசிகள் ஏற ஆரம்பித்து விட்டன. அப்போதே மக்கள் தங்களது ஆர்ப்பாட்டங்களை அமைதியான முறையில் வெளிப்படுத்தினர். 

மக்கள் மட்டும் அல்ல. அரசியல்வாதிகள் மட்டும் அல்ல. ஊடகங்கள் மட்டும் அல்ல. வாய்ப்புக் கிடைத்த அனைவருமே அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் அரசாங்கமோ, முக்கியமாக பிரதமர், இந்த கண்டனங்களை எல்லாம் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அவருடைய பிரச்சனை அவருக்கு என்பது போல அவர் நடந்து கொண்டார். தனது அரசாங்கத்தை தூக்கிப்பிடிக்க என்ன என்ன செய்ய வேண்டுமோ அதன் மீது தான் கவனம் செலுத்தினார்!

இப்போது தான் தூக்கத்திலிருந்து விடுபட்டவர் போல விலைவாசிகளைப் பற்றி பேச ஆரம்பித்திருக்கிறார்.  விவசாயம் செய்ய நிலம் வேண்டுமென்கிறார்! கோழிவிலையைக் குறைக்க வேண்டும் என்கிறார்! முட்டை சாப்பிடுவதைக் குறையுங்கள் என்கிறார்!

இங்கும் நாம் ஒன்றைச் சுட்டிக்காட்ட வேண்டும்.  விலைவாசிகளைக் கட்டுப்படுத்த அமைச்சரவை சிறப்புக்குழு ஒன்றை அமைத்திருப்பது சரிதான் என்றாலும் அந்த குழுவில் இருக்கப் போகிறவர்களும் அதே அரசியல்வாதிகள் தான்! அப்படி இருப்பதைவிட துறை சார்ந்த நிபுணர்களுடன் கலந்துரையாடி ஒரு நீண்ட கால தீர்வு காண்பது இன்னும் நல்லது அல்லவா!

இது மக்கள் பிரச்சனை. மக்களின் வயிற்றுப் பிரச்சனை. அவர்கள் சொல்லுவதை அரசாங்கம் காதில் வாங்க வேண்டும். அதற்காகத்தான் ஊர்வலம் அதுவும் அமைதி ஊர்வலம். அதற்குக் கூட எதிர்ப்பு என்றால் மக்கள் எங்குச் செல்வார்கள்?

அமைதி ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்பது தான் அரசாங்கத்திற்கு நாம் வைக்கும் கோரிக்கை!

No comments:

Post a Comment