Saturday 23 July 2022

சிந்திப்பதே இல்லையா?


 பணம் பற்றியான சிந்தனை உங்களுக்கு  இருந்ததே இல்லையா? பிரச்சனை இல்லை! இனி அதனை மாற்றிக் கொள்ளுங்கள்.  

அது பற்றி  சிந்திப்பதே இல்லை என்று சொல்லுபவர்கள் சந்நியாசியாக  இருக்க வேண்டும். அன்றன்றையப் படி அவர்களுக்கு  அளக்கப்பட்டுவிடும்! கவலைப்பட ஒன்றுமில்லை!

அவர்களைப் பற்றி நாம் பேசப்போவதில்லை.  நம்மைப் பற்றி யோசிப்போம். நமக்குக் குடும்பம், பிள்ளைக்குட்டிகள், பள்ளிக்கூடம், மாதாந்திர தவணைகள் - இப்படி அனைத்தும் பணம்! பணம்! பணந்தான்!

வேலையில் இருக்கும் போது நமக்கு இவைகள் எல்லாம் சுமைகளாகத் தெரிவதில்லை. சம்பாதிக்கிறோம் செலவு செய்கிறோம்! இது போதாதா?

நண்பா! இது போதாது!  வருகிற பணத்தை அனைத்தையும்  செலவு செய்ய நாம் பிறக்கவில்லை. நமக்குப் பல கடமைகள் உண்டு. அதில் முக்கியம் நமக்கு சொந்த வீடு வேண்டும். தலைக்கு மேலே கூரை இருந்தால் நாம் எஜமானன்!

ஆனால் அது போதாது. பிள்ளைகள் படிக்க வேண்டும். இப்படி இன்னும் பல. ஆனால் வேலை செய்து இவைகளை எல்லாம் பூர்த்தி செய்வது  எளிதல்ல.

ஒரு சிறு தொழில் செய்தால் கூட  நாம் வேலை செய்து சம்பாதிப்பதை விட இன்னும் அதிகமாகவே சம்பாதிக்கலாம். தொழில் செய்வதின் இரகசியத்தை நாம் புரிந்து கொள்வதில்லை. நாம் ஒரே மாதிரியான சிந்தனையில் பல காலம் வாழ்ந்துவிட்டோம். வேலை செய்தால் தான் சாப்பாடு என்று சொல்லியே நமது பிள்ளைகளை வளர்த்துவிட்டதினால் தொழில், வியாபாரம் என்றாலே 'நமக்கும் அதற்கும் சம்பந்தமில்லை!' என்று  நமது பிள்ளைகளும் ஒரு தீர்மானத்திற்கு வந்துவிட்டனர்!

ஒரு காலகட்டத்தில் சீனர்கள் இல்லை என்றால் நமக்குச் சாப்பாடே இல்லை என்கிற நிலை இருந்தது. அந்த அளவுக்கு வியாபாரம் அவர்கள் கையில் இருந்தது. சீனர்கள் தங்களது பெருநாள் காலங்களில் தங்களது கடைகளை ஒரு மாத காலத்திற்காவது அடைத்துவிடுவார்கள்! பொருள்களை எங்கே வாங்குவது என்கிற நிலை. ஆனால் இப்போது அதெல்லாம் மாறிவிட்டது.

ஆனால் அந்த மாதிரியான இக்கட்டான காலகட்டத்திலும்  நமது செட்டியார்களும், தமிழ்  முஸ்லிம் நண்பர்களும்   கடைகள் வைத்து நடத்திக் கொண்டு தான் இருந்தனர். யாரை நம்பி? தமிழர்களை நம்பித்தான்!

அவர்கள் என்ன படிக்காதவர்களா? கல்வி அறிவு இல்லாதவர்களா? அவர்கள் தங்களது கல்வியறிவை தொழில் செய்து தங்களை வளர்த்துக் கொள்ள பயன்படுத்தினார்கள். அவ்வளவு தான்.

தொடர்ந்து சிந்திப்போம்!

No comments:

Post a Comment