Tuesday 5 July 2022

இது தொடர் கதையா?

 


இன்றைய நிலையில் மக்காவ் மோசடிக் கும்பலாக இருந்தாலும் சரி நமது உள்நாட்டு கந்துவட்டியில் பணம் கொடுக்கும் ஆலோங்காக இருந்தாலுன் சரி - இரு கும்பல்களுமே மிகவும்  துடிதுடிப்போடு செயல்படுகின்றனர்,  புதிய புதிய யுக்திகளைக்  கையாளுகின்றனர்! அவர்களோடு போட்டிப் போட ஆளில்லை!

நாம் ஆலோங்கிடம் 500 வெள்ளி கடன் வாங்கினால் உங்களிடம் குறைந்தபட்சம் 5,00,000 இலட்சம்  வெள்ளியாவது  அவர்கள்  கறந்து விடுவார்கள்! அதற்கான வசதிகள் எல்லாம் அவர்களிடம் உண்டு!

இன்னொரு செய்தியும் உண்டு. ஆலோங்களிடம் நிறையப் பணப்புழக்கம் உண்டு என்று சொன்னால் அது அரசியல்வாதிகளிடமிருந்து வருகின்றன என்று சொல்லப்படுவது உண்டு. அதனால் தான் அவர்கள் மீதான நடவடிக்கைகள் மேம்போக்கானதாகவே இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அது எந்த அளவுக்கு உண்மை என்பது கேள்விக்குறியே!

ஆனால் மக்காவ் மோசடி என்பது அவர்களிடமிருந்து நமக்குப் பணம் வருவதில்லை! நம்மிடமிருந்து பணத்தைக் கறக்க மிக அற்புதமான வழிகளையெல்லாம்  அவர்கள் பயன்படுத்துகின்றனர். வங்கி. காவல்துறை - இவைகள் தான் இவர்களின் வலுவான ஆயுதம்!

இப்போது நமது நாட்டில் பெரும்பாலானோர் அந்த மோசடிக் கும்பலிடமிருந்து தொலைபேசி அழைப்புக்களைப் பெற்றுக் கொண்டு தான் இருக்கின்றனர்.   நமது தொலைபேசிகளின் எண்கள் எப்படி அவர்களிடம் போய்ச் சேர்கின்றன என்பதும் புரியாத புதிராகவே இருக்கின்றது.  தனி மனிதர்களின் ரகசியங்களை வைத்துக்கூட வருங்காலங்களில் இவர்கள் மிரட்டி சம்பாதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன! அந்த அளவுக்குத் தொழில்நுட்பம் இவர்களிடம் கைகட்டி சேவகம் செய்கிறது!

நாம் அவர்களை மறந்தாலும் அல்லது புறக்கணித்தாலும் அவர்கள் நம்மை மறப்பதில்லை. தொடர்பை நிறுத்தி விடுவதில்லை! என்றாவது ஒரு நாள் காரியம் ஆகும் என்பதில் நம்பிக்கையோடு இருப்பவர்கள். இப்போதெல்லாம் எனக்கு மாதம் ஒருமுறையாவது அவர்களிடமிருந்து  அழைப்பு வந்துவிடும்! இதில் என்ன ஆச்சரியம் என்றால்   முன்பு எனது வீட்டுத் தொலைபேசிக்கு அழைப்புவரும். சமீபத்தில் டெலிகம் ஊழியர்கள் சில மாற்றங்கள் செய்தனர். அப்போது எனது கைப்பேசி எண்ணை அவர்களிடம் கொடுத்துவிட்டேன். அதன் பின்னர் வீட்டுத் தொலைபேசிக்கு அழைப்புக்கள் நின்றுபோய் இப்போது கைப்பேசிக்கு அழைப்புக்கள் வருகின்றன! இவர்களுக்கும் அவர்களுக்கும் என்ன தொடர்பு?

இந்த மக்காவ் மோசடி கும்பல் செய்கின்ற வேலையை நீங்களும் கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள். அவர்களின் முதல்படி: யாரும் பேச மாட்டார்கள். பதிவு செய்யப்பட்ட குரல் தான் பேசும்.  "நீங்கள் ஆபத்தில் இருக்கிறீர்கள்! மேற்கொண்டு தெரிந்து கொள்ள  இந்த நம்பரை அமுக்குங்கள்!" என்று அந்த குரல் உங்களுக்குக் கட்டளையிடும்!  அப்போதே நீங்கள் அந்த அழைப்பைத் துண்டித்துவிடலாம்! 

ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். காவல்துறையோ, வங்கிகளோ, அரசாங்க அலுவலகங்களோ எப்போதுமே உங்களைத் தொலைபேசி மூலம் அழைக்கமாட்டார்கள். வங்கிகள் என்று சொன்னால் அவர்களிடம் உங்களின் வங்கிக் கணக்கு எண்ணை மட்டும் கொடுத்துவிடாதீர்கள். நேரடியாக வருகிறேன் என்று சொல்லி அழைப்பைத் துண்டித்து விடுங்கள்.

எப்படிப் பார்த்தாலும் இந்த மோசடிகள் இப்போதைக்கு ஒழியும் என்று தோன்றவில்லை. படித்தவர்கள் தான் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். அப்படியென்றால் அவர்கள் தான் அதிகம் குற்றம் புரிபவர்களாக இருப்பார்களோ!

No comments:

Post a Comment