Saturday 16 July 2022

குறைவான காய்கறிகளா?

 

மலேசியர்களின் உணவு பழக்க வழக்கங்கள் மிகவும் கீழ் நோக்கிச் சென்றுக் கொண்டிருப்பது மிகவும் வருத்தத்திற்குரியதாகவே தோன்றுகிறது.

அதாவது  மலேசியர்களில் 95% விழுக்காட்டினர்  காய்கறிகளைச் சாப்பிடுவதில் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை  என்பதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டிருப்பதாக "வணக்கம் மலேசியா" இணையதளம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

காய்கறிகள் சாப்பிடுவதே கேவலம் என்கிற மனப்பான்மையில் தான் இன்று நம்மில் பலர் இருக்கிறோம்.  இறைச்சி சாப்பிடுவதில் தான் உடலுக்கு நல்ல பலம் கிடைக்கும் என்பதாக நினைத்துக் கொள்கிறோம்.

சரி அப்படியாகவே இருக்கட்டும்.  காய்கறிகளையும் சமமான அளவிலாவது  சாப்பிட வேண்டும் என்கிற அறிவு கூட இல்லாமல் இருக்கிறோமே அது  தான் நம்மை கவலைப்பட வைக்கிறது.   இறைச்சி சாப்பிடும் போது, போனால் போகிறது, என்று கொஞ்சம் காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளலாமே! ஒவ்வொரு  நாளும் ஏதோ ஒருவகைக் காய்கறிகளைச் சேர்த்துக் கொள்வதால் உடம்புக்கு நல்லது தானே.

இன்றைய தாய்மார்களுக்கே காய்கறிகளைக் கண்டால் நடுக்கம்  ஏற்படுகிறது என்றால் அவர்களின் பிள்ளை வளர்ப்பு எப்படி இருக்கும்? சமீபத்தில் கோவிட்-19 தீவிரமாக இருந்த காலத்தில் தாய்மார்கள் குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவதில் என்ன பாடுபட்டிருப்பார்கள் என்பதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.

ஒரு சில தாய்மார்கள் "இறைச்சி இல்லேன்னா என் பிள்ள சோறே சாப்பிட மாட்டேன் என்கிறான்!" என்று பெருமையடிப்பதைப் பார்த்திருக்கிறோம்! என்ன சார் கொடுமை! குழந்தைகளுக்கு ஏற்பட்ட துயரைத்தைப்  பாருங்கள்! வயதானவர்களுக்கு வருகின்ற வியாதிகள் எல்லாம் இப்போதே குழந்தைகளுக்கும் வர ஆரம்பித்துவிட்டன என்பது சோகம். தவறான உணவு முறைகளால் குழந்தைகள் பாவம்! உடல் பெருத்து எந்த ஒரு பயிற்சியும் செய்ய முடியாமல் கைப்பேசிகளை வைத்துக் கொண்டு அங்கும் இங்கும் நகர முடியாமல் 'கேம்' விளையாடிக் கொண்டிருப்பது மிக மிக சோகம்.

இது பற்றி துணை சுகாதார அமைச்சர் என்ன கூறுகிறார் பாருங்கள்: "நாட்டில் பெரும்பாலானவர்களுக்கு ஈரலில் கொழுப்பு சேர்வது,  இருதயக் கோளாறு,  சிறுநீரகக் கோளாறு போன்ற நோய்களுக்குத் தவறான உணவு முறைகளே காரணம்" என்கிறார் அமைச்சர்.

நமது உணவு முறைகள் நமக்குத் தெரியாதா என்ன?  பல பல ஆண்டுகள்  நாம் அதிகமாக காய்கறிகளைத்தான் உண்டு வந்தோம். அப்போது இல்லாத வியாதிகள் எல்லாம் இப்போது எங்கிருந்து வந்தன?  பெரியவர்களுக்கு ஏற்படுகின்ற வியாதிகள் எல்லாம் குழந்தைகளை  இப்போது தாக்குகின்றன அது ஏன் என்பதையாவது நாம் சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா?

இறைச்சி சாப்பிடுவதைத் தவிர்க்க முடியவில்லை என்பது உண்மை தான். அதே சமயத்தில் காய்கறிகளையும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று தான் சொல்லுகிறோம். பாதி இறைச்சி என்றால் பாதி காய்கறிகள் அதுவே நல்லது. பிள்ளைகளுக்கும் அதையே சொல்லிக் கொடுங்கள். முடிந்தால் காய்கறி உணவுகளுக்கே முக்கியத்துவம் கொடுங்கள்.

காய்கறி உணவே சிறப்பு வாய்ந்தது!

No comments:

Post a Comment