Wednesday 20 July 2022

ஒப்பீடு வேண்டாமே!

 

பண வீக்கம் பற்றி பேசுவதற்கு நான் சரியான ஆள் அல்ல! அதனை முதலில் சொல்லிவிடுகிறேன்!

ஆனாலும் சில சமயங்களில் இது போன்ற விஷயங்கள் பேசப்படும் போது நமது நாடு என்னவோ உயர்ந்த நிலையில் இருப்பது போலவும் மற்ற நாடுகள் நமக்குக் கீழே இருப்பது போலவும்  இந்த அரசியல்வாதிகள் பேசுவது நமக்கு ஒத்துவரவில்லை!

ஒரு காலத்தில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமது பேசினார். அப்போது அவர் பிரதமராக இருந்தார். நாட்டை சரியாக வழிநடத்தினார் என்று சொல்ல முடியாவிட்டாலும் 'பரவாயில்லை' என்கிற போக்கு நிலவியது! நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றார். மற்ற ஆசிய நாடுகளைவிட அல்லது தென் கிழக்காசிய நாடுகளைவிட மலேசியா வெற்றிகரமான, முன்னணி நாடாக  விளங்க வேண்டும் என்கிற வேகம் அவரிடமிருந்தது. பல மாற்றங்களைச் செய்தார். அது நாட்டுக்குத் தேவையாக இருந்தது.

அவருக்குப் பிறகு பிரதமராக வந்தவர்கள் அனைத்தையும் வீணடித்து விட்டனர். பிசுபிசுக்க வைத்துவிட்டனர். அதுவும் குறிப்பாக நஜிப் அப்துல் ரசாக் வந்த பிறகு நாட்டையே மொட்டை அடித்துவிட்டார். அவர் இன்னும் பதவியில் இருந்திருந்தால்  இந்த நாடு சீனாவுக்கு விலை போயிருக்கும்! ஆனாலும் அவர் இப்போது வெளியே சவடால்தனம் பண்ணிக் கொண்டிருக்கிறார்! காரணம் அவருடைய கட்சியினர் ஆட்சியில் இருக்கின்றனர் என்கிற ஒரே காரணம் தான்!

சமீபத்தில் நமது பிரதமர் பேசும் போது மற்ற தென் கிழக்காசிய நாடுகளோடு ஒப்பிடும் போது நமது நாட்டின் பணவீக்க விகிதம் குறைவு என்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

எப்படியாவது  எதையாவது சொல்லிவிட்டுப் போகட்டும். சராசரி மலேசியர்களுக்குத் தெரிந்தது என்ன? அது தான் முக்கியம். நமது நாட்டை அண்டி வந்தவர்கள்,  வேலை தேடி வந்தவர்கள்  இன்று நம்மைவிட  முன்னேற்றம் கண்டிருக்கின்றனர். மற்றவர்கள் முன்னேறுகிறார்கள் என்றால் நமக்கு மகிழ்ச்சியே! அதற்காக நாம் வீழ்ச்சி காண்பது  என்றால் அது கேவலமான செயல்! 

சான்றுக்கு இந்தோனேசிய, வியட்னாம், தாய்லாந்து போன்ற நாடுகள்.  எல்லாம் நம்மைவிடப் பின் தங்கிய நாடுகள். ஆனால் இன்றைய  நிலை என்ன? நம்மைவிட அந்த நாடுகள் முன்னேறி விட்டன.  வாய்ச்சவடால் பேசிக் கொண்டிருந்த நமது நாடு அவர்களைவிடப் பின் தங்கி விட்டது!  

இப்போது வேலை தேடி அல்லது தொழில் செய்ய  நாம் தான் வியட்னாம் போகிறோம். இந்தோனேசியா போகிறோம். தாய்லாந்து போகிறோம். இந்தோனேசிய பணிப்பெண்களைக் கூட நம்மால் வேலைக்கு அமர்த்த முடியவில்லை. அந்த நாடு நம்மை மதிக்கவில்லை!

இந்த நிலையில் நாம் சொல்ல வருவதெல்லாம் தயவு செய்து மலேசியாவை மற்ற நாடுகளுடன் ஒப்பிட வேண்டாம். நமது நிலை அப்படி ஒன்றும் உயர்ந்ததாக இல்லை.  நாளுக்கு நாள் நாம் கீழ் நோக்கிப் போகிறோம். இலஞ்சத்தை ஒழிக்காதவரை நம்மால் முன்னேற வழியில்லை. இலஞ்ச ஒழிப்புத்துறைக்கு இலஞ்சம் வாங்கிய ஒருவரை நாம் தலைவராகப் போட்டிருக்கிறோம்!

கீழ் நோக்கிப் போவதற்கு ஒப்பீடு தேவையா?

No comments:

Post a Comment