Tuesday 12 July 2022

என்ன மாற்றத்தைக் கொண்டுவரும்?

 

                                            மலேசிய இந்தியர் பெருந்திட்ட வரைவு

மலேசிய இந்தியர் பெருந்திட்ட வரைவு பற்றியான பேச்சுக்கள்  மீண்டும் ஆரம்பித்திருக்கின்றன!

அதனை ஆரம்பித்துவைத்தவர் முன்னாள் ம.இ.கா. தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம்.

இத்தனை ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்ட இந்தப் பெருந்திட்டத்தை இப்போது தூசு தட்டி மீண்டும் மக்கள் மன்றத்திற்குக் கொண்டு வந்ததில்  நமக்கும் மகிழ்ச்சியே!

ஆனாலும் ஒரு வகையில் நமக்கு அது மகிழ்ச்சியைத் தரவில்லை. இது ம.இ.கா.வினரால் கொண்டு வரப்பட்ட ஒரு திட்டம். இத்திட்டத்தைப்பற்றி முன்னாள் தலைவர் தான்  மீண்டும் பேச ஆரம்பித்திருக்கிறார்.  அவர் பேசிய பின்னர் தான் இன்றைய ம.இ.கா. தலைவர் பேச ஆரம்பித்திருக்கிறார்!

அப்படியென்றால் இதுநாள் வரை இந்த பெருந்திட்டம் முன்னாள் தலைவர் கையில் தான் இருந்ததோ என்று நினைக்க வேண்டி உள்ளது. சொல்ல முடியாது! அங்கு என்ன நடக்கிறது என்பது பரம ரகசியம்!

இத்தனை ஆண்டுகள் எதைப்பற்றியும் கவலைப்படாதவர்கள் இப்போது அடுத்த பொதுத் தேர்தலை எதிர்ப்பார்க்கின்ற காலகட்டத்தில் அப்படி என்ன இந்தியர்கள் மேல் திடீர் பாசம்? இதற்கு முன்னர் யார் இவர்களைத் தடுத்தது?

நாம் சொல்ல வருவது எல்லாம் இவர்கள் ஆளுங்கட்சியில் அமைச்சர்களாக இருக்கிறார்கள்; செனட்டர்களாக இருக்கிறார்கள்; பல்வேறு பதவிகளில் அரசாங்கத்தைப் பிரதிநிதிக்கிறார்கள். ஆனாலும் 'நாங்கள் இந்தியர்களைப் பிரதிநிதிக்கவில்லை!'  என்பது போல நடந்து கொள்கிறார்கள்!

ஒரு நாள் தீடீரென்று 'நாங்கள் தான் இந்தியர்களின் காவலன்!' என்று சொந்தம் கொண்டாடுகிறார்கள்!

அதனால் தான் நாம் அவர்களைப் பார்த்து கேட்கின்ற கேள்வி: ஓர் சிறப்பான இந்தியர்களின் முன்னேற்றத்திற்காக ஒரு திட்டத்தை உங்கள் கையில் வைத்திருக்கிறீர்கள். அதனை வைத்துக் கொண்டு இதுவரை என்ன செய்தீர்கள் என்பது தான் கேள்வி!

மக்கள் ம.இ.கா.வினர் மீது வைக்கும் குற்றச்சாட்டு: அவர்களுக்குப் பதவி வேண்டும். செனட்டர் ஆக வேண்டும்.அரசு சார்பு நிறுவனங்களில்  பதவிகள் வேண்டும். டத்தோ வேண்டும்.  டத்தோஸ்ரீ வேண்டும். டான்ஸ்ரீ வேண்டும்.  இது தான் இவர்களின் வாழ்நாள் இலட்சியம் என்பது போல நடந்து கொள்கிறார்கள்!

நீங்கள் பேசுவதால் எந்தப் பயனுமில்லை. இந்த பெருந்திட்டம் மூலம் என்ன சாதித்திருக்கிறீர்கள் என்பதை மட்டும் மக்களுக்கு அறிவியுங்கள். அது போதும்!

No comments:

Post a Comment