Wednesday 1 September 2021

இது ஏன் இப்படி!

 கோவிட்-19 தொற்றை ஒழிக்க ஒரே வழி தடுப்பூசி போடுவது தான் என்று உலகம் பூராவும் டாக்டர்களால் வற்புறுத்தப்படுகிறது.

நமது நாட்டிலும் சுகாதார அமைச்சு நேரத்தை வீணடிக்காமல் ஞாயிறு விடுமுறையிலும் கூட தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டிருக்கிறது.

ஆனால் ஒரு சாரார் தடுப்பூசி வேண்டாம் என்கின்றனர்! இதற்கு இவர்கள் சொல்லுகின்ற காரணங்கள் என்ன என்பது இன்னும் நமக்குத் தெரியவில்லை.  அரசாங்கத்தின் மீது வழக்கும் போடுகின்றனர்!

இதைவிட இன்னும் ஒரு படி மேலே போய் அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக தனியார் கிளினிக்குகளில் சான்றிதழ்களுக்காக வரிசைகட்டி நிற்கின்றனர்! 

ஆமாம் அவர்கள் சொல்லுவதெல்லாம் "தடுப்பூசி போடுவதற்கான பணம் கொடுக்கிறேன்.  ஆனால் எனக்குத் தடுப்பூசி தேவையில்லை! சான்றிதழ் மட்டுமே தேவை!" என்கின்றனர்!

இதனை நாம் எப்படி எடுத்துக் கொள்வது?  இது மிகவும் ஆபத்தானது என்பதை இவர்கள் ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்? தடுப்பூசி போட வேண்டும் என்று நாம் ஏன் வற்புறுத்துகிறோம்? நம் மூலம் மற்றவர்களுக்கு தொற்று வரக்கூடாது என்பது தான்  முக்கியக் காரணம்.  

"நான் தடுப்பூசி போடமாட்டேன்! நான் செத்தால் நானே தான் பொறுப்பு என்று சத்தியம் செய்கிறேன்!" என்பதாக நாம் சொல்லலாம். அந்த தனிப்பட்ட உங்களது விருப்பத்தை நாம் மதிக்கிறோம்.  அப்படியென்றால் நீங்கள் பொதுவெளியைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் பொதுவெளிக்கு வருவதால் அது மற்றவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தடுப்பூசி வேண்டாம் என்று சொல்லுவதைவிட வேறு எத்தகைய ஊசி உங்களுக்குத் தேவை என்பதை வெளிப்படையாகவே அரசாங்கத்திடம் எடுத்துக் கூறலாம். இன்று வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு வகையான தடுப்பூசிகள் தயார் படுத்தப்படுகின்றன.

இன்று அனைத்துலகிலும்,  எல்லா நாடுகளிலும்,  கோவிட்-19 க்கான தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இந்த மதம், இந்த இனம் என்றெல்லாம் ஒன்றுமில்லை. எல்லா இனத்தாரும், எல்லா மதத்தாரும் தடுப்பூசிகள் போடுகின்றனர்.

நமது நாட்டைப் பொறுத்தவரை ஏன் ஒரு தரப்பினர் தடுப்பூசி வேண்டாம் என்கின்றனர் என்பது நமக்குப் புரியவில்லை. காரணங்கள் இருக்கலாம். ஆனால் நீங்கள் இப்படி மறுப்பதன் மூலம் "தடுப்பூசி போட வேண்டும்" என்று நினைப்பவர்கள் பாதிக்கப்படுகின்றனர். உங்கள் மூலம் அவர்களுக்கு ஆபத்துகள் வருகின்றன.

ஆனாலும்,  எது எப்படியோ, அரசாங்கத்திற்கு இவர்களால் பெரிய தலையிடி என்று தான் சொல்ல வேண்டும்,

இவர்களுக்குத் தடுப்பூசி போடாமல் சான்றிதழ் கொடுத்தால் அந்த டாக்டர்களுக்குக் கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும். ஏற்கனவே டாக்டர்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டதால் தான் இந்த நாட்டில் வெளி நாட்டவர்களால் பல வியாதிகள் இங்கு  இறக்குமதி செய்யப்பட்டன!

பணம் கொடுத்தால் எதுவும் நடக்கும் என்பது உண்மைதான்! ஆனால் கோவிட்-19 தொற்றில் அது நடக்கக் கூடாது என்பதில் சுகாதார அமைச்சு கடுமையான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும்.

இந்தத் தரப்பினர் தடுப்பூசி போடாதவரை நாம் கோவிட்-19  தொற்றை  கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியாது என்பது உண்மை!

ஏன், ஏன், ஏன் என்கிற கேள்வி எழாமலில்லை! நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை!

No comments:

Post a Comment