Tuesday 21 September 2021

தேர்தல் 'வேலைகள்' ஆரம்பாகிவிட்டன!

 நம்மிடையே ஒர் பழமொழி உண்டு. "அண்ணன் எப்போது சாவான்! திண்ணை எப்போது காலியாகும்!" நல்லதொரு அனுபவ மொழி!

நம் நாட்டில் சிறு சிறு கட்சிகள் நிறையவே முளைத்துவிட்டன!  இந்த அனைத்து சிறு சிறு கட்சிகளுக்குத் தான் மேலே சொன்ன பழமொழி.

இந்தக் கட்சிகள் எல்லாம் யாருக்காகக் காத்துக் கிடைக்கின்றன? அண்ணன் ம.இ.கா. திண்ணையைக் காலி செய்துவிட்டால் அந்த இடத்தைப் பிடிக்க அவர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்!

ம.இ.கா. அப்படியெல்லாம் கூடாரத்தைக் காலி செய்துவிட்டுப் போய்விடும் என்று சொல்வதற்கில்லை. தேசிய முன்னணியும் அல்லது அம்னோவும் அவ்வளவு சீக்கிரத்தில் ம.இ.கா. வை கைக்கழுவிவிடும் என்றும்   நம்புவதற்கில்லை! அம்னோவும் பலவீனமான நிலையில் உள்ள கட்சி தான். இந்த நிலையில் அவர்கள் ம.இ.கா.வை அவ்வளவு எளிதில் ஒதுக்கிவிட மாட்டார்கள்! தேர்தல் வரும்வரை எதிரும் புதிருமாக இருந்தாலும் கடைசியில் ஒன்று சேர்ந்து கொள்வார்கள் என்பதே எனது கணிப்பு.

ம.இ.கா. பலவீனமான கட்சி என்பது உண்மை தான். இந்தியர்களின் ஆதரவைப் பெறவில்லை என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் ஏதோ இருக்கின்ற கொஞ்ச நஞ்ச இந்தியர்களின் ஆதரவு அவர்களுக்கு உண்டு என்பதையும் மறுக்க முடியாது. இந்திய மக்களின் ஆதரவு அவர்களுக்கு உண்டு என்றாலும்  தலைவர்களின் ஆதரவு தான் இந்திய மக்களுக்கு  இல்லை! 

அம்னோ தலைவர் போதுமான இடங்களை எங்களுக்கு ஒதுக்குவதாக ஆண்டுக் கூட்டத்தில் பேசும் போது குறிப்பிட்டார் என்பதெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள முடியாது என்பது அவர்களுக்கே தெரியும்!  அப்படியே ஒதுக்கினாலும் இவர்களால் வெற்றி பெற முடியாது என்பதும் அவர்களுக்கும் தெரியும்!  ம.இ.கா. வினர் கூட தேசிய முன்னணியில் இருந்தால் தான் ஏதோ ஒன்றாவது கிடைக்கும்! இல்லையேல் அவர்களையும் மக்கள் துடைத்து எறிந்து விடுவார்கள்!

இந்த சிறு கட்சிகளின் நோக்கம் தேர்தலில் வெற்றி பெறுவது என்பது அல்ல. அதன் மூலம் செனட்டர் ஆகலாம்.  அதன் மூலம் துணை அமைச்சராகக் கூட  ஆகலாம்! அல்லது அரசு சார்ந்த தொழிற் துறைகளில் பதவிகள் பெறலாம். இன்னும் டத்தோ, டத்தோஸ்ரீ,  டான்ஸ்ரீ போன்ற பட்டங்கள் பெற்று பிறவிப்பயனை அனுபவிக்கலாம்! எது கிடைத்தாலும் இலாபம் தானே! அதனால் தான் அவர்கள்  'தீவிர"அரசியலில்  கவனம் செலுத்துகிறார்கள்! இவர்களால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை! ஏதோ அவர்கள் குடும்பமாவது பயன் பெற்றுப் போகட்டும்!

இனி இந்த குஞ்சான் கட்சிகள் அடிக்கடி தங்களது தலையைக் காட்டிக் கொண்டிருக்கும்! சலசலப்புகள் வரும்! என்னன்னவோ பேசுவார்கள்! சில சமுதாயத் துரோகிகள் மக்களோடு ஒட்டி உறவாடுவார்கள்!

நமது வேலை இவர்களை இரசிப்பது தான்!

No comments:

Post a Comment