Wednesday 15 September 2021

வரவேற்புக்குரிய ஒப்பந்தம்!

 மலேசிய அரசியலில் இதுவரை கேள்விப்படாத ஒரு வரலாற்று ஒப்பந்தம்!

அரசியல் கட்சிகள் இப்படியும் செயல்பட முடியும் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

வெறுமனே பேசி சண்டை, வம்பு என்று அரசியல் நடத்திக் கொண்டிருப்பதை விட இவர்கள் செய்திருக்கும் இந்த ஒப்பந்தம்  எல்லா வகையிலும் அரசியல் நிலைத்தன்மையை உறுதிபடுத்துகிறது. வாழ்த்துகள்! வரவேற்போம்!

இதற்கு முன்னாள் அமைந்த அரசாங்கத்தை அம்னோ கட்சியினர் புரட்டி எடுத்துவிட்டனர்! அந்த ஒரு பாடமே போதும்! இனி நம் நாட்டிற்கு அது போன்ற சோதனைகள் வேண்டாம்!

இந்த ஒப்பந்தத்தின் மூலம் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஓர் அம்சம் என்றால் பிரதமர் இஸ்மாயில் தொடர்ந்து தனது பணிகளை எந்த இடையூறுமின்றி அரசாங்கத்தை வழி நடத்தலாம்  என்பது தான். ஏதேனும் பிரச்சனைகள் வந்தாலும் கூடிப் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்பதும் முக்கியம். பேசுவதற்கு அவர்களுக்கு ஓர் தளம் உண்டு. அது போதும்!

இதற்கு முன்னர் இந்த நிலை இல்லை. தினசரி ஒரு முகாரி ராகம் கேட்கும்! கொடுக்காவிட்டால், இல்லாவிட்டால், முடியாவிட்டால் என்று தொடர் ஓலங்கள் கேட்டுக்கொண்டே இருக்கும்! இனி அது கேட்காது என நம்பலாம்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இன்னுமொரு அனுகூலம் உண்டு. ஆளுங்கட்சி நினைத்ததெல்லாம் செய்ய முடியாது. அதற்குக் கடிவாளம் போடுவதும் இந்த ஒப்பந்தத்தின் நோக்கம். அதே சமயத்தில் எல்லா பதவிகளுமே எங்களுக்குத்தான்  என்று பேராசைப்படும் தரப்பினருக்கு அடியும் விழும்!

இந்த ஒப்பந்தத்தை முழுமனதுடன் வரவேற்கிறோம். இதன் மூலம் அரசாங்கத்தின் வேலைகள் சுமுகமாக நடைபெறும்.  பதவிகள் இரு தரப்புக்கும் பகிர்ந்தளிக்கப்படும். ஆளுங்கட்சியும் எதிர்கட்சியும்  இணைந்து செயல்படும்.  குறைபாடுகளைக் கலைந்து நாட்டு நலனில் கவனம் செலுத்த முடியும். 

இது ஒரு தற்காலிக ஒப்பந்தம் தான். அடுத்த ஆண்டு ஜூலை வரை என்று சொல்லப்படுகிறது. அதுவரை மக்களுக்கு நிம்மதி. ஒரு நிலையான அரசாங்கம் நடந்து கொண்டிருக்கும். இப்போது அவர்கள் கண்முன் இருக்கும் முக்கியத் தடைகளைத் தகர்த்தெறிய வேண்டும்.

எப்படியோ,  இந்த ஒப்பந்தத்தை வரவேற்கிறோம். நாட்டுக்கு நலம் பயக்கும் எதுவாக இருந்தாலும் வரவேற்பது நமது கடமை. அந்தக் கோணத்தில் தான் இதனை நாம் பார்க்கிறோம்.

வரவேற்கிறோம்!

No comments:

Post a Comment