Thursday 23 September 2021

தடுப்பூசி போடாததன் மர்மம் என்ன?

 பள்ளி ஆசிரியர்கள் சுமார் 2100 பேர் தடுப்பூசி போட இன்னும்  மறுத்து வருகின்றனர் என்பதாக கல்வி அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறியிருக்கிறார்!

ஆசிரியர்கள் படித்தவர்கள்.மாணவர்களின் வழிகாட்டிகள். எடுத்துக்காட்டாக இருக்க வேண்டியவர்கள். ஓரளவு மக்களிடையே செல்வாக்கும்  பெற்றவர்கள். 

ஆசிரியர்களே இப்படி தவறான வழிகாட்டிகளாக இருப்பது நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இவர்கள் இப்படி வேண்டுமென்றே செய்கிறார்களா அல்லது வேறு காரணங்கள் அல்லது ஏதேனும் உள்நோக்கங்கள் உண்டா என்பது நமக்குப் புரியவில்லை.

உலகில் எந்த ஒரு ஆசிரியர் சமுதாயமும் தடுப்பூசி போடமாட்டோம் என்கிற செய்தி நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால் இவர்கள், ஒரு சிறிய கூட்டம்,  தடுப்பூசி வேண்டாம் என்று தொடர்ந்து மறுத்துக் கொண்டு வருவதைப் பார்த்தால்  இவர்கள் படித்தவர்களா என்கிற ஐயம் நமக்கு ஏற்படத்தான் செய்கிறது! 

ஆனால் இவர்கள் இப்படி ஆணவத்துடன் நடந்து கொள்வதற்கு ஒரே ஒரு காரணம் தான். இவர்களுடைய பிரச்சனையைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் பெரிய பெரிய ஆலோசகர்களைத் தேடிக் கொண்டு  போக வேண்டியதில்லை. அவர்களுக்குச் சம்பளமில்லா விடுமுறை கொடுத்து விடுங்கள்! அவர்கள் பள்ளிக்கு வரும்வரை சம்பளம் இல்லை! அவ்வளவு தான்!  

இன்றைய நிலைமை அவர்களுக்குச் சாதகமாக இருக்கின்றது. வேலைக்குப் போகாமல் இருக்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு மாதா மாதம் சம்பளம் கிடைத்து விடுகிறது! அது போதுமே! உழைக்காமல் வருமானம் வந்தால் உலகத்தையே சுற்றி வரலாமே!

எப்படியோ கோவிட்-19 தொற்றுக்கு தடுப்பூசி என்பது முக்கியம். அதுவும் ஆசிரியர்கள் என்றால் இன்னும் அதி முக்கியம்.  இது விளையாட்டல்ல.  மாணவர்களின் எதிர்காலம் அவர்கள் கையில் இருக்கிறது. அவர்களே மாணவர்களுக்கு வழிகாட்டிகள்.  ஆசிரியர்கள் தடுப்பூசி போட மறுத்தால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிகளுக்கு அனுப்ப மறுப்பார்கள். அது பெற்றோர்களின் குற்றமல்ல.  எல்லாருக்குமே தங்கள் குழந்தைகளின் மீது பற்றும் பாசமும் உண்டு. பொறுப்பற்ற முறையில் ஆசிரியர்கள் நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது.

குறிப்பிட்ட சில ஆசிரியர்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக  தடுப்பூசி போடுவதை மறுக்கிறார்கள். அந்தப் பிரச்சனையை அரசாங்கம் இழுத்துக் கொண்டே போவதை விட அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

தடுப்பூசி போடத்தான் வேண்டும். வேறு வழியில்லை!

No comments:

Post a Comment