Tuesday 14 September 2021

அச்சம் தவிர்!

 இன்றைய காலக்கட்டம்  பலருக்கு மிக இக்கட்டான காலக்கட்டம் என்பது நான் சொல்ல வேண்டியதில்லை. பலருக்குப் பல அனுபவங்கள்.

இப்படி ஒரு காலக்கட்டத்தை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். மற்றவர்கள் எப்படியோ என் வாழ்க்கையில் நான் அனுபவித்ததில்லை!

ஜப்பான் காலத்தில் பஞ்சம் என்றார்கள்.  அப்போது பொருள்கள் கிடைப்பதில் பஞ்சம்.  அடுத்து என்ன நடக்குமோ என்கிற பயம்.

இப்போது பஞ்சமில்லை. ஆனால் பொருள்களை வாங்க கையில் காசு இல்லை. வேலை இல்லை.சம்பளம் இல்லை. முடியாதவர் பலருக்கு இதுவும் பஞ்சம் தான். கையேந்த தயங்குபவர்களுக்குப் பட்டினி தான்.

ஆனாலும் இப்படி ஒரு நிலையை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். பலருக்கு இது பலவிதங்களில் சரியான படிப்பினை. கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று வாழ்ந்தவர்களுக்கு இப்போது கண்டதும் கொண்டதும் எதுவும் உதவிக்கு வரப்போவதில்லை!

எல்லாமே நம் கையில் தான் உள்ளது. வீழ்வது எல்லாக் காலங்களிலும்  உண்டு. அதில் ஏதும் கேவலமில்லை.  வாழ்க்கையில் வீழ்வதும் எழுவதும் நமது பொறுப்பு!

அச்சம் தவிர் என்று ஏன் சொன்னார்கள்? அச்சம் நம்மை உலுக்கிவிடும். குறுக்கிவிடும். நமது சிந்தனை ஓட்டத்தையே தடை செய்துவிடும். பயத்தை உண்டாக்கும். எப்பேர்பட்ட பலவானையும் பலவீனமாக்கிவிடும்.

எந்த நிலையில் இருந்தாலும் சரி எல்லாம் சரியாகி விடும் என்கிற எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர  அச்சம் என்கிற பய எண்ணத்தை வளர்த்துக் கொள்ளக்கூடாது.

இப்போதைய நிலைமை கடினமானது தான். இல்லையென்று சொல்லவில்லை. அதற்காக கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு ஆகாயத்தைப் பார்த்து பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்க முடியுமா? களத்தில் இறங்க வேண்டும். அரசு சாரா இயக்கங்கள் மக்களுக்குப் பல வழிகளில் உதவிகள் செய்கின்றனர். ஆலோசனைகள் கேட்க வேண்டும். வாய்ப்புக்களைத் தேட வேண்டும். நாலு  பேருடன் பழகும் போது சில வழிகள் கிடைக்கும்.

கையாலாகத சிலர் தற்கொலை எண்ணத்தை வளர்த்து கொள்கின்றனர். அதற்குப் பதிலாக "எப்படி சமாளிக்கலாம்" என்கிற எண்ணத்தை வளர்த்துக் கொண்டு களத்தில் இறங்க வேண்டும்.

வேலை இல்லை அதனால் மாதத் தவணைகளைக் கட்ட முடியவில்லை என்கிற வேதனை பலருக்கு உண்டு. தக்கவர்களைக் கண்டு பேச முற்பட வேண்டும்.  பிரச்சனைகள் பேசித் தீர்க்க வேண்டும். மனதில் போட்டு அழுத்திக்கொண்டு அச்சத்தையும் பயத்தையும் வளர்த்துக் கொண்டால் நாளடைவில் மனக்கோளாறு, தற்கொலை என்கிற நிலைக்கு அது இட்டுச் செல்லும்.

எல்லாருமே நல்லது நடக்கும் என்கிற அசட்டு நம்பிக்கையோடு தான் நாள்களை நகர்த்திக் கொண்டிருக்கிறோம். எல்லாமே ஓர் அசட்டு துணிச்சல் தான். என்ன வந்தாலும் ஒரு கை பார்ப்போம் என்று சவாலோடு பிரச்சனைகளை அணுகுவோம்.

அச்சத்தை தவிர்ப்போம்! அமோகமாக வாழ்வோம்!

No comments:

Post a Comment