Thursday 2 September 2021

இந்திய சமூகத்திற்கான கோரிக்கைகள்!

 ம.இ.கா.வின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் "வணக்கம் மலேசியா" இணையத்தள நேர்காணலின் போது நல்ல பல கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார். வரவேற்கிறோம்.

வருங்காலங்களில் இந்திய சமூகத்திற்கான தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்கிற தேசிய முன்னணியின் உத்தரவாதத்துடன் தான்  15-வது பொதுத் தேர்தலை ம.இ.கா. எதிர்கொள்ளும் என்று அறிவித்திருக்கிறார். நல்ல செய்தி தான் வரவேற்கிறோம்.

ஏற்கனவே செய்யப்பட்ட தவறுகளை மீண்டும் மீண்டும் சொல்லிக்காட்டி அதையே சாக்காக வைத்துக் கொண்டு ம.இ.கா.வை குறை சொல்லுவது சரியான போக்கு அல்ல என்கிறார் அவர்.  புரிகிறது.

நம்மைப் பொறுத்தவரை அதற்குச் சில காரணங்கள் உண்டு. ஏற்கனவே செய்யப்பட்ட தவறுகளின் போது நீங்களும் உடன் இருந்தீர்கள். டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரனும் உடன் இருந்தார். எந்த மாற்றமும் இல்லை. அதனால் தான் இன்னும் அந்தப்  பழைய ம.இ.கா. தான் நினைவுக்கு வருகிறதே தவிர ம.இ.கா.வில் எந்த மாற்றமும் ஏற்பட்டிருப்பதாக  இதுவரை கண்களுக்குத் தெரியவில்லை! அதனால் தான் அந்தக் குறைகளையே சுட்டிக் காட்ட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை நமக்கு இன்னும் தொடர்கிறது!

இன்று ம.இ.கா.வைக் குறை சொல்லுபவர்கள் எல்லாம்  ஒரு காலத்தில் ம.இ.கா.வில் இருந்தவர்கள் தான்,  நான் உட்பட!

பேராக் மாநிலத்தில், தமிழ்ப்பள்ளிகளுக்குக் கொடுக்கப்பட்ட  2000 ஏக்கர் நிலம் என்னவானது என்று கேட்டால் நல்ல, சாமர்த்தியமான பதில் உங்களிடம்  உள்ளது!  நாங்கள் சொல்லுவது எல்லாம் மலாய், சீனப்பள்ளிகள்  நடைமுறையைப் பின்பற்றிருந்தால் இந்நேரம் அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளும் பயன் அடைந்திருக்கும் என்பது தான்.   ம.இ.கா.விற்கு மட்டும் ஏன் வேறு நடைமுறை என்பது தான் எங்கள் கேள்வி.

இது போன்ற இன்னும் பல சம்பவங்கள் உண்டு. அது வேண்டாம்! அதனைக் கிளற, கிளற மனம் கொந்தளிக்கும்.

வருகிற  தேர்தலில் இந்திய சமுதாயத்திற்கான உங்கள் கோரிக்கைகள், தேவைகள் அனைத்தும் நிறைவேற்றுவோம் என்கிற உறுதிமொழியோடு தான் களம் இறங்குவோம் என்கிறீர்கள். அறுபது ஆண்டுகளாக அதே பிரச்சனை, அதே கோரிக்கை, அதே தேவைகள் - புதிதாக என்ன இருக்கப் போகிறது?

வருங்காலங்களில் ம.இ.கா.வின் நிலைப்பாடு எப்படி இருக்கும் எனக் கேட்டால் ஒன்றைச் சொல்லுகிறேன். செல்லியல் இணையத்தளத்தில் தேசிய தினத்தை முன்னிட்டு ம.இ.கா. தலைவர் விடுத்திருக்கும் செய்தியை -அதனையே தேசிய மொழியில் அவரால் கொடுக்க முடியுமா? 

போங்க டத்தோஸ்ரீ! சும்மா தமாஷ் பண்ணாதீங்க!

No comments:

Post a Comment