Saturday 4 September 2021

தடுப்பூசி இல்லை? வகுப்பறை இல்லை!

 கல்வி அமைச்சர் டத்தோ டாக்டர்  ராட்ஸின் ஜிடின் சரியான நேரத்தில் சரியான அறிவுரையை அல்லது எச்சரிக்கையை ஆசிரியர்களுக்கு விடுத்திருப்பதாகவும்  எடுத்துக் கொள்ளலாம்.

இந்த அறிவுரை கோவிட்-19 தடுப்பூசியைப் புறக்கணிக்கும் ஆசிரியர்களுக்கு மட்டுமே.

நாட்டில் சுமார் 2,500 ஆசிரியர்கள் தடுப்பூசி போடுவதைப் பல்வேறு காரணங்களுக்காக மறுத்திருக்கிறார்கள் என்பதை  அதிர்ச்சி தரும் விஷயமாகவே நாம் பார்க்கிறோம். அதில் தடுப்பூசி மேல் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்கிற காரணமும் ஓன்று!

பெற்றோர்களைப் பொறுத்தவரை தங்கள் பிள்ளைகள் பள்ளிகளுக்குப் போகிறார்கள். அவர்களுக்குப் பாதுகாப்பு வேண்டும். அவ்வளவு தான்.  அவர்களின் பாதுகாப்புக்குக் கல்வி அமைச்சே பொறுப்பு.  கல்வி அமைச்சைப் பொறுத்தவரை மாணவர்களின் பாதுகாப்புக்கு ஆசிரியர்கள் தடுப்பூசி போட வேண்டும். இதில் வெவ்வேறு கருத்துகள் இல்லை.

கல்வி அமைச்சின் கோரிக்கையை ஆசிரியர்கள் புறக்கணித்தால் அதன் பின்விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை ஓரிரு வார்த்தைகளால் சொல்ல வேண்டுமென்றால் "தடுப்பூசி போடலையா? உங்களுக்கு வகுப்பறை இல்லை!" என்பது தான் இப்போதைய செய்தி!

அவர்களுக்கு அப்படியே வேறு வேலை வாய்ப்புக்களை வழங்கினாலும் அங்கும் அவர்களுக்குக் கோவிட்-19 தடுப்பூசி தேவை தானே! தடுப்பூசி போடவில்லையென்றால் அவர்கள் "வீடே கதி" என்கிற நிலை தான் வருமே தவிர வேறு வழியில்லை என்றே நமக்குத் தோன்றுகிறது!

இந்த விஷயத்தில் சிலாங்கூர் சுல்தான் இன்னும் கண்டிப்பாக இருக்கிறார். மாநிலத்தில் உள்ள சமய ஆசிரியர்கள், பள்ளிவாசல்களின் பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட வேண்டும். போடாதவர்கள் தங்களது கடமைகளைச் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்  என்று எச்சரித்திருக்கிறார்!

ஆசிரியர்களே! நீங்கள் சமுதாயத்தில் மக்களின் மரியாதைக்கு உரியவர்களாக இருக்கிறீர்கள். மக்கள் உங்களை உயர்ந்த, மரியாதைக்குரிய நிலையில் வைத்திருக்கிறார்கள். உலகமே கொண்டாடுகின்ற கோவிட்-19 தடுப்பூசியை நீங்கள் மட்டும் இப்படித்  துண்டாடுகிறீர்களே, இது சரியா?

இப்படி நீங்கள் தவிர்ப்பதன் மூலம் மற்றவர்களுக்கு அபாயத்தை ஏற்படுத்துகிறீர்களே! இது ஆசிரியர்களின் வேலை அல்லவே! யோசியுங்கள்!

No comments:

Post a Comment