Friday 24 September 2021

நல்ல செய்தியாக இருந்தாலும்.....!

 அரசாங்கம்  சமீபகாலமாக  கோவிட்-19 மீதான தளர்வுகளை அறிவித்துக் கொண்டு வருகிறது.

நல்ல செய்தி தான். மக்களுக்கு மகிழ்வூட்டும் செய்தி தான்.

என்ன தான் தளர்வுகள் மீதான செய்திகள் தொடர்ந்து வந்தாலும் பொது மக்களின் பொறுப்பு என்ன என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். கொஞ்சம் தளர்வு என்றதுமே நாம்  தலைகால் புரியாமல் ஆடுகிறோம்! ஆனால் அது அப்படி அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.   

கோவிட்-19 தொற்று இன்னும் முற்றாக ஒழிக்கப்படவில்லை என்பதை எப்போதும்  மறந்து விடாதீர்கள். அது இன்னும் ஒரு சில ஆண்டுகள் நம்மோடு தான் இருக்கும் என்பதும் உண்மை!

அரசாங்கம் இப்போது ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.   90 விழுக்காடு மக்கள் தடுப்பூசி போட்டுவிட்டால் இனி மாநிலம் விட்டு மாநிலம் செல்லலாம் என்கிற அறிவிப்பை நல்ல செய்தியாகவே எடுத்துக் கொள்ளலாம்.  இப்போதைக்கு 80.2 விழுக்காடு மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

90 விழுக்காடு போடப்பட்டப் பிறகு தான் இன்னும் அதிகமானப் பயணங்களை மேற்கொள்ளலாம்.   ஆனால் நமக்கும் சிறிது சந்தேகங்கள் உண்டு.  வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அனைவரும் ஊசி போட்டுக் கொண்டு விட்டனரா? என்கிற கேள்வி தான் அது. பலர் போட்டுவிட்டனர். பலர் போடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.   எல்லாம் சரிதான். ஆனால் சட்டத்திற்குப் புறம்பாக நாட்டில் தங்கியிருப்பவர்கள், தங்கி வேலை செய்பவர்கள் - இவர்கள் நிலை என்ன? இவர்களில் எத்தனை விழுக்காடு தடுப்பூசி போட்டிருக்கின்றனர் என்கிற கேள்வியும் எழத்தான் செய்கிறது! முதலில் இவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதையாவது கண்டுபிடிக்க முடிகிறதா என்பதும் புரியாத புதிர்! ஒரு சிலர் வெளியே வந்து உயிருக்குப் பயந்து தடுப்பூசி போட வெளியே வருகிறார்கள். இன்னும் பலர் தங்களுக்குத் தெரிந்த வைத்தியத்தோடு போராடிக் கொண்டிருப்பார்கள்.

சட்டத்திற்குப் புறம்பானவர்கள் இருக்கும் வரை இந்தத் தொற்றை நம் அரசாங்கத்தால் ஒழிக்க முடியாது! அவர்கள் என்றென்றும் நமக்கு, மலேசியர்களுக்கு, ஆபத்தானவர்கள்! அதில் சந்தேகமில்லை.

ஆனால் அனைத்தும் நம் கையில் தான் உள்ளது. அடக்கமாக இருப்போம். அப்படியே வேளியே போக வேண்டிய கட்டாயம் இருந்தாலும் முகக் கவசம் அணிந்து, செய்ய வேண்டியவைகளை செய்து, முறையாக நமது பயணத்தை அமைத்துக் கொள்வோம். 

கிடைத்த  செய்தி நல்ல செய்தி தான்! அதனால் அதனை ஆக்கப்பூர்வமாக  பயன்படுத்திக் கொள்வோம்!                                                                                                                                                                                                                                                                                                                                                         

No comments:

Post a Comment