Monday 6 September 2021

தேவையற்ற பதவிகள் எதற்கு?

 நமது அரசியல்வாதிகள் யாரையோ திருப்திப்படுத்த அல்லது அரசாங்கம் தொடர்ந்து செயல்பட, தகுதி இருக்கிறதோ இல்லையோ, ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் ஏதோ ஒரு பதவியைக் கொடுக்க வேண்டும் என்கிற நெருக்கடியில்  முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் எப்படி இருந்தாரோ அதே நிலையில் தான் இப்போதைய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பும் இருக்கிறார் என அறியும் போது "இது என்னடா அயோக்கியத்தனம்!" என்று தலையில் அடித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது!

இப்போது அரசாங்கத்தை அண்டி வாழும் அரசியல்வாதிகள் ஏதோ மாசுமருவற்ற புண்ணிய பூமியிலிருந்த வந்த புண்ணிய ஆத்மாக்கள் என்று மார்தட்டும் இவர்கள், ஒர் அரசாங்கத்தைக் காப்பாற்ற பாவம்! இவர்களுக்குக் கட்டாய பதவிகள் தேவைப்படுகின்றன என நினைக்கும் போது எத்தகைய பதவிப் பேய்கள் இவர்கள் என ஆச்சரியப்பட வேண்டியுள்ளது!

அதைத்தான் "படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில்!" என்று பெரியவர்கள் சொன்னார்கள்! பேசுவது புனிதம் செய்வது பொறுக்கித்தனம்!

வெளிநாடுகளில்,  உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும், மலேசியத் தூதர்கள் பணியாற்றுகின்றனர். அவர்கள் அனைவரும் நமது நாட்டைப் பிரதிநிதிக்கின்றனர். அவர்கள் அனைவரும் தூதரக பணிக்கென பயிற்சி பெற்றவர்கள். அதற்கான தகுதியை அவர்கள் பெற்றிருக்கின்றனர். எந்த நேரத்திலும் அல்லது நெருக்கடியுலும் பிரச்சனைகளைச் சமாளிக்கக் கூடிய ஆற்றல் பெற்றவர்கள். நமது நாட்டில் மட்டும் அல்ல உலகெங்கிலும் இது தான் நடைமுறை.

ஆனால் இப்போது கொஞ்சம் கூட தகுதியற்றவர்களை விசேட தூதர்கள் என்னும் பெயரில் அரசியல்வாதிகளுக்குப்  பதவிகள் கொடுக்கப்படுகின்றன. வெறும் தூதர்கள் மட்டும் அல்ல அவர்களுக்கு அந்தப் பதவிகள் மூலம் அமைச்சர் என்னும் அந்தஸ்தும் கொடுக்கப்படுகின்றது! அதாவது அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதற்கான சம்பளம், அமைச்சர் அந்தஸ்து உள்ள தூதர் பதவிகள்,   அதற்கான அமைச்சருக்குரிய  சம்பளம்! இந்தத் தூதர் பதவிகள் மூலம் அவர்கள் செய்யும் வேலை என்ன? விட்டில் தூங்கிக் கொண்டே அமைச்சருக்குள்ள சம்பளம் வாங்குவது தான்! தூதர்கள் இருக்கும் போது இவர்களுக்கான வேலை தான் என்ன?

இந்த புதிய இஸ்மாயில் சப்ரி அமைச்சரவையில் மூன்று பேர்களுக்கு தூதர்/அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங்! மற்ற இரு தலைவர்களும் இஸ்மாயில் அமைச்சரவையைத் தாங்கிப் பிடிப்பவர்கள்! அவ்வளவு தான்! அப்படியென்றால் இந்தப் பதவிகள் அவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை என்றால் அமைச்சரவைக் கவிழும் என்பது உறுதி!  ஆக, பாஸ் தலைவர் ஹாடி அவாங்கும் இஸ்மாயிலைப் பயமுறுத்திக் கொண்டிருக்கிறார் என்பதும் உறுதி! பாஸ் கட்சித் தலைவர் இப்படி பயமுறுத்துல் நாடகம் நடத்துவார் என்பதை நாம் எதிர்பார்க்கவில்லை!

இவர்களுக்கெல்லாம் யார் வீட்டுப் பணம் சம்பளமாகக் கொடுக்கப்படுகின்றது? எல்லாம் மக்களின் வரிப்பணம்! வாரி வாரி வழங்கப்பாடுகின்றது! மக்களோ வேலை இல்லை சம்பளம் இல்லை, உணவு இல்லை! இந்த நிலையில் இவர்களுக்குப் பதவி, இன்னொரு பதவி, அதற்கான சம்பளம்! அடாடா! அரசியல்வாதிகளே! நீங்களும் உங்கள் குடும்பங்களும் வாழ்க! வாழ்க!

No comments:

Post a Comment