Sunday 5 September 2021

தண்டிக்கப்படுவது யார்?

 சமீபத்தில் ஜப்பானில் நடைப்பெற்ற பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் குண்டு எறிதல் போட்டியில் முதல் பரிசான  தங்கத்தை இழந்த மலேசிய வீரர் ஷியாட்  சுல்கிஃபிலி எப்படி அந்த முதல் பரிசை இழந்தார் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும்.

ஷியாட் இதற்கு முன் ஒலிம்பிக் போட்டியில் தான்  செய்த உலக  சாதனையை இந்த ஒலிம்பிக்  போட்டியில் முறியடித்திருக்கிறார். அவர்  செய்த சாதனை 17.94 மீட்டர் ஆகும். அதுவே புதிய உலக சாதனை.

ஆனாலும் அவரால் பரிசனைப் பெற முடியவில்லை. காரணம் அவர்  போட்டி  நடைபெறுகின்ற இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்தை விட மூன்று நிமிடங்கள் தாமதாக வந்தார் என்பது தான் அவர் மீதான குற்றச்சாட்டு.

ஒலிம்பிக் போட்டி நடுவர்களை நாம் குறை சொல்ல இயலாது. அவர்கள் ஒலிம்பிக் போட்டியின்  சில சட்டத் திட்டங்களைப் பின்பற்ற வேண்டும். அது அவர்களது கடமை. அவர்கள் கடமையை அவர்கள் செய்கிறார்கள். அதனால் நடுவர்கள் குற்றவாளிகள் அல்ல.

போட்டியாளரான ஷியாட் சுல்கிஃபிலி ஒரு வெற்றியாளர். ஆனாலும் அவரிடம் குறைபாடுகள் உணடு. அவர் கால் ஊனமானவர். இந்தப்  பாரா ஒலிம்பிக்  போட்டி என்பதே மாற்றுத்திறனாளிகளுக்கானப் போட்டி தான். அந்தக் குறைபாடுகளைத் தாண்டி தான் அவர் இந்த  சாதனையைப் புரிந்திருக்கிறார்.  அவர் ஒரு வெற்றியாளரே தவிர அவர் தோல்வியாளர் அல்ல. அதனால் அவரைக் குற்றவாளி என்று சொல்ல நா கூசும்.

ஆனால் மலேசிய ஒலிம்பிக் குழு,  குண்டு எறிதல் போட்டிக்கான  நடுவர் முகமட் பைசல் ஹருண் என்ன சொல்ல வருகிறார்? "அது எனது தவறு தான்!" என்கிறார்! ஆமாம் அது அவரது தவறு தான். போட்டியாளர்கள் மாற்றுத் திறனாளிகள் என்பது அவருக்குத் தெரியும். அவர் தான் அவர்களுக்குத் துணையாக இருக்க வேண்டும். அவர்கள் மொழி புரியாமல் இருக்கலாம். அவர்களுக்குப் பொதுவாக என்ன பேசினாலும் விளங்காதவர்களாகக் கூட இருக்கலாம்.  அதனால் தான் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் என்று சொல்லுகிறோம்.

அப்படி என்றால் அவர்களுக்கு முழு பொறுப்பாளர்கள் மலேசிய அதிகாரிகள் தான்; நடுவர்கள் தான். முதல் பரிசான தங்கத்தை இழப்பது என்பது அவர்களுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு, சாதாரணமான விஷயமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. தங்கம் என்பது அவர்களின் சாதனை. அவர்களின் பெருமை. அதே சமயத்தில் மலேசிய அரசாங்கம் அவர்களுக்குப் பண வெகுமதியும் கொடுக்கின்றனர்.

மாற்றுத்திறானாளிகளுக்கான இந்த ஒலிம்பிக் போட்டியில் தங்க வென்றவர்களுக்கு மலேசிய அரசாங்கம் கொடுக்கும் பண வெகுமதி என்பது பத்து இலட்சம் வெள்ளி. அதே போல இரண்டாம் பரிசு மூன்று இலட்சம் வெள்ளியும் மூன்றாம் பரிசாக ஒரு இலட்சம் வெள்ளியும் கொடுக்கப்படுகின்றது.

எப்படிப் பார்த்தாலும்  பத்து இலட்சம் வெள்ளி என்பது சிறு தொகையா? ஒரு மாற்றுத்திறனாளியை இப்படி சோதிக்கலாமா?

No comments:

Post a Comment