Wednesday 19 July 2023

மாநில அரசாங்கத்திற்கு நன்றி:

 

      நன்றி: வணக்கம் மலேசியா                          செபஸ்தியார் கலைக்கூடம்

செபஸ்தியார் கலைக்கூடம் மீண்டும் திறக்கப்பட்ட செய்தி மகழ்ச்சியூட்டுகிறது. 

பொதுவாக இந்த கலைக்கூடத்தைப் பற்றி நான் ஒன்றும் அறியேன். நமக்குத் தெரிந்தது எல்லாம் இந்த கலைக்கூடத்தைப் பற்றியான செய்திகளை நமது செய்தித்தாள்களில் படித்திருக்கிறேன். 

அது ஒரு நல்ல சேவை. நாட்டுப்புற கலைகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வரும் சூழலில் அதனைத் தூக்கி நிறுத்த அதன் நிறுவனர் இருதயம் செபஸ்தியார் எடுத்த முயற்சிகளைப் பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம்.

கடந்த சில தினங்களாக வந்த செய்திகள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கின.  அங்கிருந்து காலி செய்யும்படி அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றனர்.  கலைப்பொருள்கள் அனைத்தும் வீதிக்கு வந்துவிட்டன. மிகவும் அதிர்ச்சியான செய்தி என்பதில் ஐயமில்லை.

ஆனாலும் நம்மிடையே ஒரு கேள்வி உண்டு. இந்த கட்டடத்தைப் பயன்படுத்த  மாநில அரசாங்கம் 2009-ம் ஆண்டு அனுமதி அளித்திருக்கிறது. அப்போது ம.இ.கா.வின் உதவியோடு அனைத்தும் நடந்திருக்கின்றன. நாம் வாழ்த்துகிறோம்.

ஆனால் அந்தக் கட்டடம் நிரந்தரமாக அவர்களுக்கு ஒதுக்கப்பட்டதா  அல்லது குறிப்பிட்ட ஆண்டுகள் வரை பயன்படுத்த அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதா போன்ற விபரங்கள் நம்மிடம் இல்லை. ஆட்சியில் இருப்பவர்கள் நேரத்திற்குத் தகுந்தாற் போல  தாளம் போடுபவர்கள்!  அதனை நாம் அறிந்தது தான்.

ஒரு கட்டடத்தைப் பயன்படுத்த  அரசாங்கம் அனுமதி அளித்தால் அதனை நிரந்தரமாகப் பய்ன்படுத்துவதற்கான ஏற்பாடுகளை நாம் செய்ய வேண்டும்.  பின்னால் பிரச்சனைகள் வரக்கூடாது என்கிற ஒரே காரணம் தான். பொதுவாக இந்தியர்கள் சம்பந்தப்பட்ட எல்லாக் காரியங்களிலும் ஏதோ ஒரு வகையில் இது போன்றே அகப்பட்டுக் கொள்கிறோம். அரசாங்கம் வைக்கும் கண்ணியில் மாட்டிக் கொள்கிறோம். எவனோ ஒரு தலைவன் 'நான் பார்த்துக் கொள்கிறேன்'  என்று சொன்னால் அவனை நம்பி விடுகிறோம்.  கடைசியில் அவன் பேரிலேயே அதனை மாற்றிக் கொள்வான்!  இதெல்லாம் நம் கண் முன்னால் நடந்தவை தான்!

இப்போது மீண்டும் பயன்படுத்த அனுமதி கிடைத்திருக்கிறது. நல்லது தான். தேர்தல் நேரம் அல்லவா! கிடைக்காததும் கிடைக்கும். எத்தனை நாளைக்கு என்கிற கேள்வியும் நமக்கு எழ வேண்டும். முடிந்தவரை அதனை நிரந்தரமாக்க இப்போதே வேலையை ஆரம்பிக்க வேண்டும். மாற்றிடம் கிடைத்தால் அதுவும் நிரந்தரமாக கிடைக்க ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

இப்போது ஏற்பட்ட 'வீதிக்குக் கொண்டு வந்த அவமானம்' மீண்டும் வராதபடி அதற்கான வேலைகளை இப்போதே ஆரம்பிக்க வேண்டும். எத்தனை நாளைக்கு இப்படி நாம் அவமானப்படுவது?

இதனைத் தேர்தல் கால 'பாவபுண்ணியம்'  என்கிற ரீதியில் தான் கிடைத்திருக்கிறது! இனியாவது புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளுங்கள், செபஸ்தியாரே!

No comments:

Post a Comment