Sunday 16 July 2023

வாழ்த்துகிறோம் நண்பனே!

               


 நம் மலேசிய நாட்டில் தமிழர் ஒருவர் வர்த்தகத்தில் ஈடுபடுகிறார் என்றாலே நாம் மகிழ்ச்சி அடைவதில் தவறு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.  

காரணம் பொருளாதார ரீதியில் நலிந்து கிடக்கும் சமுதாயத்தில்  நாலு தமிழர்கள் தொழில் செய்ய முனைகிறார்கள் என்றால்  அவர்களை வரவேற்க நினைப்பதில் தவறில்லை.

குறிப்பிட்ட "கார சாரம்" உணவகம் இப்போது பங்சாரில்  திறந்திருப்பது தனது பதினோராவது கிளையை.  வாழ்த்துவது நமது கடமை.

ஒரு பக்கம் உணவகத் தொழிலில் ஆள் பற்றாக்குறை  என்கிற புலம்பல். இன்னொரு பக்கம் ஒரு சில  உணவகங்கள்  புதிது புதிதாக கிளைகளைத் திறக்கின்றன. ஒன்று மட்டும் தெரிகிறது.  முறையாக உணவகங்களை நடத்துவோருக்கு ஆள்பற்றாக்குறை ஏற்படுவதில்லை!

குறிப்பாக இந்த காலகட்டத்தில் ஒரு நிறுவனம் பதினோரு கிளைகளை நடத்துவது அவ்வளவு எளிதானது அல்ல. அதுவும் நாடு இப்போது பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கியிருக்கின்ற நேரம். மக்களிடம்  வேலை இல்லாப் பிரச்சனைகள் உண்டு. இன்னும் பல தொழிற்சாலைகள் திறக்கப்படவில்லை.  உணவு பொருட்களின் விலையேற்றம்.  இன்னும் ஏறக்கூடிய சூழல் உண்டு.  ஆள்பற்றாக்குறை என்கிற கோஷமும் எழுந்து கொண்டிருக்கிறது! ஆனாலும் ஒன்றைப் பார்த்து நாம் வியக்க வேண்டியுள்ளது. Food Panda  வின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது! யாரைப் பார்த்தாலும் அவர்களது சேவையைத் தான் பயன்படுத்துகின்றனர். வெளியே போகாதபடி வாகன நெரிசல்கள்.  அதனால் உணவுகள் வீடைத் தேடி வருகின்றன!  இதிலிருந்து என்ன தெரிகிறது?  உணவுக்கான தேவைகள் அதிகரித்துக் கொண்டு தான் வருகின்றன.

இது போன்ற ஒரு நிலையில் இன்னொரு உணவகக் கிளையையும் திறக்கிறோம் என்பது வியப்பு ஒன்றுமில்லை.   தேவை இருக்கிறது. தேவையைப் பூர்த்தி செய்வது  உணவகங்களின் கடமை.

ஆனால்  உள்ளூரில் என்னவோ  நமது  இளவயதினரை இந்த உணவகங்கள் ஏன் ஈர்க்கவில்லை  என்பது தான்  நமக்குப் புரியவில்லை.  நமது இளைஞர்கள் ஓர் அலுவலக சூழலைத்தான் விரும்புகின்றனர். முதலாளிகள் அதனைப் புரிந்து கொள்ள வேண்டும். உணவகங்கள் ஓர் அலுவலகம் போல இயங்க வேண்டும். கௌரவமாக நடத்தப்பட வேண்டும். இப்போதுள்ள தலைமுறை இதனைத்தான் விரும்புகிறது.  

புதிய கார சாரம் உணவகத்தை வாழ்த்துகிறோம். சிறப்பாக, வெற்றிகரமாக நடைபெற நமது வாழ்த்துகள். இன்னும் பல உணவகங்கள் திறக்கப்பட வேண்டும். தமிழர்கள் வியாபாரத் துறையில் வியத்தகு  முன்னேற்றத்தை அடைய வேண்டும்!

No comments:

Post a Comment