Tuesday 4 July 2023

பேராசிரியரை தொடர விடுவார்களா?

 

பினாங்கு துணை முதலமச்சர் பேராசிரியர் இராமசாமி அவர்களை நாட்டில் அறியாதவர்  யாரும் இருக்க முடியாது. ஒரே காரணம் தான். அவர் தான் ஒரு மாநிலத்தின்  துணை முதலமைச்சர்.  ஓர் தமிழர்.  அதற்கு முன்னர் துணை முதல்  அமைச்சர் என்கிற  வார்த்தையை எந்த ஒரு தமிழனும்  மலேசிய நாட்டில் கேட்டதில்லை! இவர் பெயர் தான் முதன் முதலாக தமிழர்களின் காதில் ஒலித்த பெயர்.

கடந்த  மூன்று தவணைகளாக பினாங்கு மாநில சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்து எடுக்கப்பட்டவர். அதன் மூலம் மாநில துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டவர். சுமார் பதினைந்து ஆண்டுகளாக  அவர் துணை முதலமைச்சராகப் பணியாற்றி வருபவர்.

இந்த தவணை, வருகின்ற பொதுத் தேர்தலில், போட்டியிடுவதற்கான வாய்ப்பு இவருக்கு அளிக்கப்படுமா என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.  போட்டியிடுவதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டாலும் துணை முதல்வர் பதவி கிடைக்குமா என்பதும் ஐயமே.

ஆனால் அரசியலில் என்னன்னவோ நடக்கும். வலுவுள்ளவன் பிழைத்துக் கொள்வான் என்பார்கள்.  பேராசிரியரே கேட்பது போல இந்த ஒரு முறை அவருக்குப் போட்டியிட வாய்ப்புக் கொடுக்கலாம். துணை முதல்வராகவும் பதவி கொடுக்கலாம். 

பேராசிரியர் ஓரு கல்வியாளர். தமிழர்களின் பிரச்சனைகளைப் புரிந்தவர். அவர் பதவியில் இருந்து கொண்டு இன்னும் செய்ய வேண்டியவை நிறையவே உண்டு. குறிப்பாக மொழிக்கும், தமிழரின் பொருளாதார உயர்வுக்கும் செய்ய வேண்டியவை இன்னமும் உண்டு.  இந்த கடைசி வாய்ப்பைக் கொடுத்தால் அதனையும் ஓர் அளவு அவரால்  திருப்திகரமாக செய்து முடிக்க  முடியும் என நம்புகிறேன்.

பொருளாதார வளர்ச்சி என்பது தமிழர்களுக்குத் தேவையான ஒன்று.  எத்தனையோ தலைவர்கள் வந்தார்கள், போனார்கள் - கடைசியில் அவர்கள் தான் வளர்ச்சி அடைந்தார்களே தவிர இந்த இனத்தை அவர்களால் வளர்ச்சி அடைய செய்ய முடியவில்லை.

அரசியலில் இன்று ஒருவர் போனார் நாளை ஒருவர் வருவார். ஆனால் சமுதாய உயர்வை மதிப்பவர் எத்தனை பேர்?  அதுவும் வருபவர் எல்லாம் வழக்கறிஞராக வருகிறார்கள். வருபவர்களில் பலர் அங்கே பேர் போட முடியாமல் அரசியலுக்கு வருகிறார்கள் என்பது பொதுவான பார்வை! இருந்தாலும் யாரையும் குற்றம்சாட்ட  விரும்பவில்லை.

இங்கு நாம் குறிப்பிட விரும்புவது பினாங்கு துணை முதல்வர் பதவி என்பது ஒரு தமிழருக்கான பதவி. அந்த பாரம்பரியம் தொடர வேண்டும். அதனை நாம் விட்டுவிட முடியாது. ஏற்கனவே கூட ஜார்ஜ்டவுன் மேயராக ஓர் இலங்கைத் தமிழரான  D.S. இராமநாதன் இருந்திருக்கிறார்.  நல்ல  கல்வியாளர்.  அது நமது பாரம்பரியம். அதனை நாம் விட்டுவிட முடியாது.

அதைத்தான் ஜ.செ.க. உணர வேண்டும். ஏதோ ஓர் இந்தியர் என்று இந்தப் பிரச்சனையை அணுகாமல் தொடர்ந்து பேராசிரியர் இராமசாமி அவர்களையே அந்தப் பதவிக்கு, குறைந்தபட்சம் இன்னும் ஒருதவணை, நியமனம் செய்ய வேண்டும் என்பதே நமது வேண்டுகோள். தமிழர் நலனே எங்களுக்கு முக்கியம். அதை அவரால் பூர்த்தி செய்ய முடியும்.

No comments:

Post a Comment