Thursday 6 July 2023

சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்!

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மலேசிய இந்தியர் காங்கிரஸ் மற்றும் மலேசிய சீனர் சங்கமும் தாங்கள் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துவிட்டன.

அம்னோ கட்சியினருக்கு இது முக்கியமான தேர்தல். வாழ்வா சாவா தேர்தல். இந்த நிலையில் அவர்கள் ம.இ.கா.வுக்கும் ம.சீ.ச.வுக்கும் போட்டியிட தொகுதிகளை ஒதுக்குவார்கள்  என்று நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அவர்கள் நிலையே அம்மணமா அல்லது அலங்காரமா என்று அவர்களுக்கே தெரியாது! இதில் வேறு இந்த கோவணாண்டிகளை வைத்துக்கொண்டு கோட் சூட்டெல்லாம் போடலாம் என்று நினைப்பதே தவறு!  ஒதுங்கி விடுவதே நல்லது என்கிற நிலைமைக்கு வந்து விட்டார்கள்.

முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் இந்நாள் பிரதமர் அன்வார் இப்ராகிமுக்குப் பெரும் மிரட்டலாக  இருக்கிறார்! அவர் வாழ்நாள் முழுவதும் பொய் சொல்லியே அரசியலில் வளர்ந்தவர்.  தேர்தல் நெருங்க நெருங்க அவர் பல்வேறு குற்றச்சாட்டுக்களைக் கொண்டு வருவார்  என எதிர்பார்க்கலாம்.  தீடீரென இந்த நாடு கிறிஸ்துவ நாடாக மாற்றிவிட்டார்கள் எனக் கூப்பாடு போடுவார்! மலாய்க்காரர்கள் சொந்த நாட்டில்  இரண்டாம் தர பிரஜையாக ஆகிவிட்டார்கள் என கிராமத்துக்குக் கிராமம் போய் தண்டோரா போடுவார்!  இவருக்கு ஜால்ரா அடிக்க டாக்டர் மகாதிர் கூடவே ஓடுவார்!   இப்படி பேசுவதை  மலாய் மக்கள் விரும்புவார்கள்  எனத் தப்புக்கணக்குப் போட்டிருக்கிறார் முகைதீன்!

தேசிய முன்னணியிலிருந்து இந்த இரண்டு கட்சிகளும் விலகிய பின்னர்  அம்னோ தான் தனித்துப் போட்டியிடுகிறது. அதன் பலம் என்ன  அதாவது மலாய்க்காரரிடையே அதன் பலத்தைக் காட்ட வேண்டிய நிலையில் உள்ளது அம்னோ. பொதுவாகப் பார்த்தால் அம்னோ கோட்டையும் முன்பே சரிந்து போய்விட்டது!  இப்போதும் கூட  அது தனது முந்தைய பலத்தைக் காட்ட இயலாது என்பது தான் பொதுவான கருத்து. அந்த அளவுக்கு மக்கள் மனதில்  ஒரு வெறுப்பை சம்பாதித்துவிட்டார்கள்!  அவர்களை அவ்வளவு சீக்கிரத்தில் மக்கள் மறந்துவிட மாட்டார்கள்!

சமீபத்தில் இலஞ்சம்  ஊழல் ஒழிப்பு ஆணையம்  வெளியிட்ட அறிக்கையில் நாட்டில் அதிகமான ஊழல்  கடந்த ஐந்தாறு ஆண்டுகளாகத் தான் நடந்திருக்கின்றன என்று கூறுகிறது.  ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் பெரும்பாலும் அரசியல்வாதிகள் சுமார் 65 விழுக்காட்டினர்! இங்கு அரசியல்வாதிகள் எனக் கூறும்போது அது பெரும்பாலும் அம்னோவினரைத்தான் குறிவைக்கிறது. இவர்கள் பெயர் தான் நாளிதழ்களில்  நாறடிக்கப்பட்டு வந்தன! உப்பு தின்னவன் தண்ணி குடித்துத்தான் ஆக வேண்டும். வேறு வழியில்லை ஐயனே!

எப்படியோ இந்த சட்டமன்ற தேர்தல் பொதுவில் வித்தியாசமானது. பழைய ஆரவாரங்கள் எதுவும் இருக்கப் போவதில்லை. அம்னோ மீண்டும் எழுமா என்கிற கேள்வி மீண்டும் மீண்டும் பேசப்படுகின்றது. டாக்டர் மகாதிர்  தனது கடைசி காலத்தில் இருக்கிறார். அவர் ஓர் அழிவு சக்தி என்பது பலருக்குப் புரிகிறது. அவர் தொட்டது துலங்காது என்பது தான் அவருடைய அந்திமகால நியதி!

No comments:

Post a Comment