Saturday 8 July 2023

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்!

 

                                              களத்தில் முகமட் அஸ்வான் ஜமாலுடின்

பொதுவாக கைப்பேசிகள் பற்றியான  அறிவு ஏதோ ஓர் அளவுக்குத் தான் என்னிடம்  உள்ளது  நமக்கு அந்தப்பக்கம் எந்த வேலையும் இல்லை! அதனால் அதனைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வமும் இல்லை.

ஆனால் பினாங்கு, கப்பளா பத்தாஸைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்  தனது சாதாரண கைப்பேசிகளை வைத்துகொண்டு,  திருமண வைபவங்களில் படங்களை எடுத்துக்  கொண்டு  கலக்கி வருகிறார். அது என்னையும் ஆச்சரியப் படுத்துகிறது. 

அவருடைய பெயர் முகமட் அஸ்லான் ஜமாலுடின், வயது 27. ஆரம்ப காலத்தில் இலவசமாக, திருமணப் படங்களை எடுத்து அதன் தரம் எப்படி என்பதைக் கேட்டுத்  தெரிந்து கொண்டு அதன் பின்னர் அதனையே ஒரு தொழிலாகவும் மாற்றிக் கொண்டார். இதற்கெல்லாம் ஒரு திறன் வேண்டும், ஆர்வம் வேண்டும், கலை ஆர்வம் இருக்க வேண்டும். அது அவரிடம் இருந்தது.

இப்போதெல்லாம் கையில் நவீன கருவிகளை வைத்துக் கொண்டு திருமண நிகழ்ச்சிகளைப் படம் எடுப்பவர்கள் நிறையவே வந்துவிட்டனர். அதற்காக அவர்கள் நிறையவே கட்டணமும்  வாங்குகின்றனர்.  ஆனால் அஸ்லான் தனது கட்டணத்தைக் குறைத்து ரி.ம.200 வெள்ளியைத்தான் கட்டணமாகப் பெறுகிறார்.  சிக்கனம் என்று சொன்னாலும் தரமும் இருப்பதால் அவரின் சேவைக்கு நல்ல மரியாதையும் உண்டு.

இன்று பல அதிநவீன கருவிகளைக் கொண்ட  படபிடிப்பாளர்கள் வேலையின்றி தவிக்கும் வேளையில்  அஸ்லானுக்கு மட்டும் அடுத்த ஆண்டுவரை  முன்பதிவு செய்யபட்டிருகின்றனவாம்!  அவருடைய வேலை நாள்கள் என்றால் ஒவ்வொருவாரமும் மூன்று நாள்கள் தாம். வெள்ளி, சனி, ஞாயிறு. பெரும்பாலான திருமணங்கள் அன்றைய கிழமைகளில் தான்  நடைபெறுகின்றன.  அடுத்த ஆண்டு மே மாதம் வரையில் அவர்  முன்பதிவு செய்யப்பட்டிருக்கிறாராம்/

நம் இளைஞர்கள்  நவினமான கைப்பேசிகளை வைத்திருக்கின்றனர்.  எதற்கு எதற்கோ பயன்படுத்துகின்றனர். எப்படிப் பயன்படுத்தினாலும் சரி  கடைசியில் அதன்  தொழிலநுட்பங்களைப் பயன்படுத்தி  ஒரு தொழிலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.  அல்லது கற்றுக் கொள்ளுங்கள். இப்போதுள்ள நவீன கருவிகளின் மூலம் நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கின்றன. வெறும் பொழுது போக்கு என்று எண்ணாமல் அதனை ஒரு தொழிலாக மாற்றி அமையுங்கள்.

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்கிற சொலவடையைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்.  மற்றபடி அதன் ஆயுதத்தைப் பற்றி நாம் சிந்தித்ததில்லை. இதோ ஓர் இளைஞர் அதனை நிருபித்துக் காட்டியிருக்கிறார்.

இளைஞர் பட்டாளம் நினைத்தால் எதனையும் சாதிக்கலாம்!
       

No comments:

Post a Comment