Friday 7 July 2023

துரித மீ 1,150 கோடி உண்கிறோம்!

 

நம் நாட்டில்  'மீ'  என்றால் அறியாதவர் யாருமில்லை. ஒரு வேளை நூடல்ஸ்  என்கிற வார்த்தை நமக்குப் புதிதாக  இருக்கலாம். அது தமிழ் சினிமாவின் மூலம் நமக்கு அறிமுகமான பெயர். ஆனால் நமக்கோ அதனை  அன்று முதல் இன்றுவரை  மீ  என்று சொல்லியே பழக்கப்பட்டு விட்டோம். ஒரு காலகட்டத்தில்  மீ என்பதே ஆங்கிலச்சொல் என்கிற எண்ணமே, என்னைப்போன்றவர்களுக்கு,  ஓங்கி நின்றது.

இப்போது நமது வீடுகளில் ஏதோ ஒரு வகை மீ  இருந்து கொண்டு தான் இருக்கும். நாம் தினசரி நமது உணவுகளில் பயன்படுத்திக் கொண்டுதான்  இருக்கிறோம். மீகூன் போன்றவை  நாம் அடிக்கடி பயன்படுத்துபவை. மேலே காணப்படும் துரித மீ  நம் வீடுகளில்  அவசியம் இருக்கும். ஆபத்து அவசர வேளைகளில் இதனை விட்டால் வேறு ஒன்றுமில்லையே!

பொதுவாகச் சொன்னால் சீனர் சமூகம் எங்கிருக்கிறதோ அங்கே  மீ வகைகள் தவிர்க்க முடியாதவை. அதனால் தான் நாம் இளம் வயதிலிருந்தே மீ வகைகளுக்கு அடிமையாகிவிட்டோம்.  அது நம் அன்றாட உணவு வகைகளில் ஒன்றாகிவிட்டது.

துரித மீ வியாபாரத்திற்கு எந்தவொரு எல்லையுமில்லை. கடைகளில் அடுக்கி அடுக்கி கணக்குவழக்கில்லாமல் வைத்திருக்கிறார்கள். ஒரு கடையில் கிடைக்கவில்லை என்றாலும் ஏதோ ஒரு கடையில் கிடைக்கத்தான் செய்யும்.

அதன் அளவுக்கு அதிகமான வியாபாரத்திற்கான காரணம் என்னவாக இருக்கும்? மலேசியர்களைப் பொறுத்தவரை அது விலை மலிவு என்பது தான் காரணமாக இருக்க வேண்டும். அதுவும் கையில் காசு இல்லையென்றால் நாம் எங்கே போவது?  உணவகங்களில் விலையோ எல்லாரும் சாப்பிட முடியாத அளவுக்கு உயர்ந்து போய் இருக்கும் போது துரித மீ தான் கைகொடுக்கும். குறிப்பாக ஏழைகள், அன்றாடங் காய்ச்சிகள், இவர்களுக்கு அதிகம் கைகொடுப்பது துரித மீகள் தான். பார்க்கப்போனால் அது ஏழைகளின் உணவு என்று தான் சொல்ல வேண்டும்.

வீட்டைவிட்டு வெளியே போய் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்குச் செல்லும் மாணவர்களுக்கு இது போன்ற துரித மீகளை வைத்துக் கொண்டு தான் நாள்களைக் கடத்த வேண்டும்!  வேறு என்ன செய்ய?உணவகங்கள் அருகில் இல்லை. சமைக்கத் தெரியாது. அப்போது உடனடியாகப் பசியைத் தீர்ப்பது துரித மீ மட்டும் தான்!

இந்த துரித மீ யைத்தான் மலேசியர்களாகிய நாம்,  ஒர் ஆண்டிற்கு  ஆயிரத்து நூற்று ஐம்பது கோடி மீயை உட்கொள்கிறோம் என்பதாக  அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. துரித மீ யின் தாயகமான சீனா ஓர் ஆண்டிற்கு நான்காயிரத்து ஐனூறு கோடி மீ உட்கொள்ளப்படுவதாக - அதுவே உலகின் முதலிடத்தைப் பிடித்திருப்பதாகவும்  அந்த அறிவிப்பு உறுதிப்படுத்துகிறது!

No comments:

Post a Comment