Wednesday 26 July 2023

நமக்கு எந்த தகுதியும் இல்லை!

 

                                                                   Dato Abdul Malik

ஊழல் தடுப்பு ஆணையம் இப்போது யார் யாரையோ கைது செய்து கொண்டிருக்கிறது.

ஆணையத்தைப் பொறுத்தவரை கைது செய்பவர்கள் எல்லாம் குற்றவாளிகள்  என்று அவர்கள் சொல்லுவதில்லை. நாமும் அதனை எதிர்பார்ப்பதில்லை.  குற்றவாளி என்று சொன்னால் போதுமான ஆதாரங்கள் இன்றி யாரையும் குற்றவாளி என்று சொல்லிவிட முடியாது. விசாரணைகள்,  தொடர் விசாரணைகள்  என்று அது ஒரு நீண்ட காலப் போராட்டம். ஒரு நாளைக்குள் முடிவுக்கு வரக்கூடிய ஒன்றல்ல.

நம்மில் சிலர் பண்ணுகின்ற அட்டகாசங்களைப் பார்க்கும் போது  நமக்கு அது வேதனையைத் தருகிறது.  டத்தோ மாலிக்  ஒரு தமிழர் என்பதை மறந்து விடாதீர்கள். தமிழர் என்றால் சிலருக்குக் கொண்டாட்டம்.  ஒரு தமிழன் நல்ல நிலையில் இருந்தால் வயிறு எரியும். அவன் கெட்டுப் போனால்  மனம் பூத்துக் குலுங்கும்! தமிழன் முன்னுக்கே வரக்கூடாது  என்று அலையும் ஒரு கூட்டம் தான் பறையடித்துப் பல்லைக்காட்டுகிறது!

இன்று, நமது நாட்டில், தமிழ் முஸ்லிம்கள், செட்டியார் சமூகத்தினர்  - இவர்கள் தான் நமது அடையாளங்கள்.  வியாபாரிகள், பொருளாதார முன்னேற்றம் அடைந்தவர்கள் என்றால் வேறு தமிழர்கள் யாரையும் நம்மால்  சுட்டிக்காட்ட முடியவில்லை.  

இந்த சூழ்நிலையில் நம்மில் ஒருவர்  மீது   ஊழல் குற்றச்சாட்டைக் கொண்டு வந்தால் அதனைப் பறை அடித்து கொண்டாட வேண்டுமா? என்பதை யோசித்துப் பாருங்கள்.  அவர் தவறு செய்தாரா என்று நிருபிக்க  ஓரிரு நாள் போதாது.  தப்பு செய்தவன் உப்புத் தின்று தான் ஆக வேண்டும். அதில் சந்தேகமில்லை.  டத்தோ மாலிக் ஊழல் புரிந்திருந்தால் அதற்கானத் தண்டனையை அவர் அனுபவித்துத் தான் ஆக வேண்டும். 

ஊழல் தடுப்பு ஆணையம் எத்தனையோ சீன வணிகர்களைக் கைது செய்திருக்கிறது. இலஞ்சம் வாங்கியதாக எத்தனையோ மலாய்க்காரர்களைக் கைது செய்திருக்கிறது.   அந்த சமுகத்தினர்கள்  என்ன சொன்னார்கள்? "நீ தவறு செய்திருந்தால் தண்டனையை அனுபவி" என்பது தான் அவர்களின் நிலை. அதற்கு மேல் செய்ய என்ன இருக்கிறது? அவர்கள் யாரும் அந்தக் கைதுகளைப் பறை அடித்துக் கொண்டாடவில்லை. 

ஆனால் நாம் என்ன செய்கிறோம்? ஒரு தமிழர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுகிறார். பட்டாசு வெடித்துக் கொண்டாடுகிறோம். அத்தோடு நிற்பதில்லை. ஒரு சமூகத்தையே கேவலப்படுத்துகிறோம். அதாவது நம்மை நாமே அசிங்கப்படுத்திக் கொள்கிறோம்.

தொழில் செய்பவர்களுக்குப் பல இடையூறுகள் உள்ளன. தொழில் செய்பவர்களுக்கு அது புரியும். டத்தோ மாலிக் பல இடையூறுகளைக் கடந்து வந்தவர். இளம் வயதிலேயே சாதனைகள் பல புரிந்தவர். இன்றைய நிலைக்கு அவர் வருவதற்குப் பல கஷ்டங்களை அவர் அனுபவித்திருப்பார்.  சும்மா யாரும் அவருக்குப் பணத்தை தூக்கி கொடுத்து விடவில்லை.

நண்பர்களே! யாரையும் உங்கள் விருப்பத்திற்குத் தீர்ப்பிடாதீர்கள். உங்களால் முடியாததை டத்தோ மாலிக் செய்து காட்டியிருக்கிறார். ஏன் உங்களால் முடியவில்லை? நீங்கள் தான் மற்றவர் வீழ்ச்சியைக் கண்டு களிப்படைகிறீர்களே!  எல்லாமே நமக்குப் பாடம் தான்.  டத்தோ மாலிக் போன்றவர்கள் இன்று வீழ்ச்சி அடைந்தாலும்  நாளையே பழைய நிலைக்கு வந்து விடுவார்.  அந்தத் திறமை அவருக்கு உண்டு.  அது தான் தமிழர்களின் தனித்திறமை. நீங்கள் என்ன செய்வீர்கள். உங்களால் எதுவும் செய்ய முடியாது! 

தமிழர்களுக்குள்ளே தட்டிக் கொடுத்து முன்னேற உதவுங்கள்!

No comments:

Post a Comment