Saturday 22 July 2023

மளிகைக்கடைகளின் சுத்தமோ! சுத்தம்!

 

இப்போதெல்லாம் வருகின்ற செய்திகள் நம்மை அதிர்ச்சியில்  உறைய  வைக்கின்றன.

சுத்தம், சுகாதாரம் என்று பேசுகிறோமே தவிர அதை கடைப்பிடிப்பதில் யாரும் கவனம் செலுத்துவதில்லை. அதுவும் குறிப்பாக  மளிகைக்கடைகள், பேரங்காடிகள்  என்று எதை எடுத்துக் கொண்டாலும் இப்படித்தான் நடந்து கொண்டிருக்கின்றன.

நம்மைக் கேட்டால் அரசாங்கத்தைத்தான் குறை சொல்லுவோம். நம்மால் என்ன செய்ய முடியும்? அரசாங்கம் 1,00,000 வெள்ளி அபராதம் விதித்தால்  அதற்குப் பின்னர் யாரும் செய்யத் தயங்குவார்கள். இப்போது அவர்கள் சும்மா ஓர் நூறு வெள்ளிக் கொடுத்து பிரச்சனையை மூடி மறைத்து 
 விடுகிறார்கள்.

இது முற்றிலுமே அரசாங்கத்தின் தவறாகத்தான் நான் நினைக்கிறேன். கடுமையான அபராதம் இல்லாத நிலையில் நாட்டில் எதுவும் நடக்கும். கடுமையான அபராதம் ஒன்றே இது போன்ற பிரச்சனையைத் தீர்க்க முடியும்.

எலி தின்றபிறகு தான் மனிதர் சாப்பிடுவது என்றால் இது என்ன கொடூரம் என்று தான் தோன்றுகிறது. எலி என்பதே ஒரு விஷப்பிராணி.  அது எத்தகைய விஷம் வாய்ந்தது என்று இதற்கு முன் பல செய்திகளைப் படித்திருக்கிறோம். அது சாப்பிடுவதை  மனிதர் சாப்பிட்டால்  நிச்சயம் அது சாவில் தான் போய் முடியும். தெரியாமல் சாப்பிட்டாலும் அது வேறுவித பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

ஆனாலும் இது போன்ற பிரச்சனைகளைச் சுகாதார அமைச்சால் தீர்க்க முடியவில்லை என்று தான் தோன்றுகிறது. சட்டங்கள் சரியாகக் கடைப்பிடிக்கப் படுவதில்லை  ஒன்று இலஞ்சம் வந்து புகுந்து விடுகிறது. அல்லது இனம் மூக்கை நுழைக்கிறது. இந்த நிலையில் எங்கே நீதி கிடைக்கப் போகிறது?  சுத்தத்தைப் பற்றி கவலைப்பட ஆளில்லை! இது தான் நிலைமை!

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். மக்களை ஏமாற்றிப் பிழைக்க நினைப்பவர்களுக்கு என்றென்றும் கத்தி தலைக்கு மேல்  தொங்கிக் கொண்டுதான் இருக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது. நாம் செய்வது நமக்கே திரும்பி வரும்!

இது போன்ற உணவு பொருட்களில் எலிகளை மேய விடுவது மகா பாவம். இது மகா அலட்சியம்.  அது மளிகைக் கடையோ அல்லது பெரும் அங்காடியோ  மிகவும் கண்டிக்கத் தக்க ஓர் அலட்சியம். இது மளிகைக் கடையாக இருக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகம். பேரங்காடிகள் தங்களது உணவு பொருட்களை பாதுகாப்போடு தான் வைத்திருப்பார்கள்.

சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்! அதுவே எமது வேண்டுகோள்!

No comments:

Post a Comment