Monday 31 July 2023

தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்கிறது!

 

பதினைந்தாவது சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டன!

ஆறு மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல். அதில் இரண்டு மாநிலங்கள் பாஸ் கட்சிக்கு உரியது. அதனால் அது பற்றி நாம் அதிகக் கவலைப்படுவதில்லை.  அது மலாய்க்கரர்களின் தலையெழுத்து!

ஆனால் நம்மால் அப்படியெல்லாம் சும்மா இருந்துவிட முடியாது. இந்தியர்களின் எதிர்காலமும் இதில் அடங்கும்.

நாம் நீண்ட காலம் தேசிய முன்னணி கூட்டணியில் ஏமாற்றப்பட்டவர்கள். சுமார் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக. கடைசியில் நம்மை அவர்கள் பழங்குடி மக்களின் நிலைக்குத் தள்ளிவிட்டனர். அதற்காக  ம.இ.கா.வுக்கு ஒரு சபாஷ்!

இப்போது நடப்பது, எந்த ஒரு கட்சிக்கும் போதுமான பலம் இல்லாததால், இதுவும் ஒரு கூட்டணி தான். அதன் பலன் தான் ஒற்றுமை அரசாங்கம்.  பிரதமர் அன்வார் தான் நினைத்தது போல செயல்பட முடியாத ஒரு சூழலில் தான் அவர் இருக்கிறார்.   இருந்தாலும் தன்னால் முடிந்ததை அவர் செய்கிறார் என்று தான் சொல்ல முடியும்.

எதிர்தரப்பைப் பாருங்கள். யாரையாவது நமபக்கூடிய ஒரு மனிதரைச் சொல்லுங்கள்.  எல்லாரும் ஊழல் புரிந்தவர்கள். சரி, அதை விட்டாலும் அவர்கள் நாணயஸ்தர்கள் என்று சொல்லக்கூடிய அளவுக்கு யாரையாவது  சுட்டிக்காட்ட முடியுமா?  நாம் முன்னாள் பிரதமர் முகைதீனையே எடுத்துக் கொள்ளுங்கள். இவர் இந்தியர் பற்றி எந்தக் கவலையும் இல்லாதவர். நமது கோவில்கள், நமது மொழி, நமது முன்னேற்றம்  இது பற்றி கவலை உள்ளவரா,  சொல்லுங்கள்?  நமது மலாய் ஆட்சியாளர்கள்  தேர்தல் நேரத்தில் "அல்லா" பிரச்சனையை எழுப்ப வேண்டாம் என்று சொல்லியும் அவர் எழுப்புகிறார். அவர்  மலாய் ஆட்சியாளர்களை மதிக்கவில்லை என்பது தானே பொருள்?   அது மட்டுமா? தேர்தல் நெருங்க நெருங்க அவர் நடப்பது "கிறித்துவ" ஆட்சி என்று நிச்சயமாக சொல்லுவார்!  எதிர்பார்க்கலாம்!

அடுத்து அவர்களின் பெருந்தலைவர் என்றால் டாக்டர்  மகாதிர்.  இவரை ஒரு தலைவர் என்று சொல்லவே அருகதையற்றவர்.  ஓர் இந்தியராக இருந்தும் இந்தியர்களின் பரம எதிரியாக செயல்பட்டவர்.  துன் சாமிவேலு அவர்களால் தொடங்கப்பட்ட "மைக்கா ஹோல்டிங்ஸ்"   அதன்  மொத்த அழிவுக்குக் காரணமே இவர்தான்.  நாட்டின் நலன்,மக்களின் நலன் என்பதைவிட தனது நலன், தனது குடும்ப நலன் - இப்படித்தான் அவர்  செயல்படுவார்!

இன்றைய பிரதமர் அன்வார் தான் இவர்களில் மாறுபட்டவராகத் தோன்றுகிறார். நம் இனத்தவர் மீது அக்கறை உள்ளவராகச் செயல்படுகிறார்.  அவருக்கு நாம் போதுமான நேரம் கொடுக்க வேண்டும். இப்போதே நம்மைக் கைவிட்டு விட்டார் என்று  புலம்பிக் கொண்டிருக்கக் கூடாது.

நாம் பொறுத்துத்தான் ஆக வேண்டும். நம் பிரதிநிதிகளும் நமது பிரச்சனைகளைப் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இன்றைய நிலை என்பது நாம் பழங்குடி மக்களை விட நமது தரம் உயர்த்தப்பட வேண்டும்.

தேர்தல் பிரச்சாரத்தை அதிகம் நம்பிவிடாதீர்கள்!


No comments:

Post a Comment