Thursday 27 July 2023

எல்லாவற்றிலும் முதலிடம் பெறுங்கள்!

 


நம் மலேசியர்களிடம் எல்லாவற்றையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்கிற  எண்ணம் அரைகுறையாகத் தான் இருக்கிறதே தவிர முழுமையாக இன்னும் வரவில்லை  வீட்டில் பெற்றோர்கள் என்ன செய்கிறார்களோ அவர்களைத்தான்  பிள்ளைகளும் பின்பற்றுகிறார்கள். ஒரு சில பெற்றோர்கள் 'வீட்டைச் சுத்தமாக வைத்திருங்கள் வெளியே அவசியமில்லை' என்று சொல்லி பிள்ளைகளை வளர்ப்பவர்களும் இருக்கிறார்கள்! நம் வீடு தான் நமது பொறுப்பு வெளியே நமது பொறுப்பல்ல என்பது சுயநலம் தான். என்ன செய்வது?

இந்த நிலையில் தான் துப்புரவு பணியாளர்    ஒருவருக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்  தெரிவித்திருக்கிறார் மலாய்ப் பெண்மணி ஒருவர்.  அடிக்கடி பயணம் போகும் அவருக்கு  எண்ணைய் நிலையங்களில் கழிவறைகள் எப்படி இருக்கும் என்பதை அறிந்தவர்.  ஆனால் அன்று அனைத்தும் பொய்யாகி விட்டன!

தாப்பா நெடுஞ்சாலையில் ஓய்வெடுக்கும் பகுதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு அங்குள்ள கழிவறையைப் பயன்படுத்தச் சென்ற போது தான்  அவருக்கு அந்த ஆச்சரியம் காத்திருந்தது. இது நாள் வரை பார்த்தது வேறு; இன்று பார்த்தது வேறு.  அந்தப் பெண்மணியின் வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால்: "கழிவறைகள்  கண்ணாடியைப் போல சுத்தமாக இருந்தன. அந்தத்  துப்புரவு பணியாளர்  மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார். என்னிடம் மிகவும் கனிவோடு பேசினார்" என்று அந்த துப்புரவு பணியாளரைப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார் அந்த மலாய்ப் பெண்மணி!

அவரது சேவையை அங்கீகரிக்கும் வகையில்  தனது கருத்தை தெரிவிக்க எந்த வசதியும் இல்லாததால் அந்த துப்புரவு பணியாளர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தனது முகநூலில்  அவரின் செய்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.  ஆமாம், அவர் செய்கின்ற அவரது வேலை குத்தகை அடிப்படையில் நடக்கிறது. அதனை நிரந்தர பணியாக மாற்ற உதவும்படி அவரது முயற்சிக்கு அதரவளித்து அதனை வைரலாக்கும்படி  கேட்டுக் கொண்டிருக்கிறார். அதனைத்தான் அந்தப் பெண்மணி வைரலாக்கி அந்த துப்புரவு பணியாளருக்கு உதவும்படி  கேட்டுக் கொண்டிருக்கிறார்.

முன்பொருமுறை படித்த  உலக நாயகன் கமலஹாசன் பற்றியான செய்தி. அவரது தாயார் சொல்லுவாராம் "நீ குப்பை அள்ளினாலும் அதிலும் முதன்மையானவனாக வரவேண்டும்" என்று. அதைத்தான் அவர் செய்து காட்டியிருக்கிறார். சினிமா உலகில் அவர் தான் முதன்மையானவர்! அதே போல இந்த துப்புரவு பணியாளர் தனது துப்புரவு பணியில் முதன்மையானவர். பாராட்டுகள்! 

உங்கள் பணி நிரந்தரமாக வாழ்த்துகள்!

No comments:

Post a Comment