Sunday 30 July 2023

நாட்டுப்பற்று இல்லாத ஒரு மனிதர்!

 

டாக்டர் மகாதிர், நமது முன்னாள் பிரதமர், அரசியலில் எப்படி நுழைந்தவர் என்பதை நம் நாடே அறியும்.

அவரது பலமே இனங்களிடையே அச்சத்தை தோற்றுவிப்பது தான். இப்போது அவர் புதியதோர் அச்சத்தை தோற்றுவித்திருக்கிறார். அதாவது சீனர்களையும், இந்தியர்களையும் வந்தேறிகள் என்றும் இந்த நாட்டை உங்கள் நாடு  என்று சொந்தம் கொண்டாடாதீர்கள் என்று மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார்.

இப்படி சொல்லுவதின் மூலம் தாநும் ஒரு  வந்தேறி என்பதை மற்றவர்கள் மறக்க வேண்டும் என்பதற்காகக் கூட இருக்கலாம். அவர் அரசியலுக்கு வந்த பின்னர் தான் அவர் தனது  செல்வாக்கைப் பயன்படுத்தி  தனது இந்தியர் அடையாளத்தை வலுக்கட்டாயமாக  அழித்தார் என்பது வரலாறு. ஆகவே அவரும் வந்தேறி தான். அதற்கு இன்றும் சான்றுகள் உண்டு.

ஆமாம், அவர் ஏன் இப்போது, இந்த சட்டமன்ற தேர்தல் காலத்தில், அவர் மீண்டும் வந்தேறிகள் பிரச்சனையை எழுப்ப வேண்டும்?  இனக்கலவரத்தை  தூண்டுவதற்கு தேர்தல் காலம் தான்  சரியான காலம் என்பதை  அவர் உணர்ந்திருக்கிறார்.  காரணம் அதன் பலனை அவர் 22 ஆண்டுகாலம்   அனுபவித்தவர். மீண்டும் வாய்ப்பில்லை என்று அவருக்குத் தெரியும்.    ஆனாலும் முயற்சி செய்து பார்க்கிறார்!

விதி என்று ஒன்று இருக்கிறதோ இல்லையோ இந்த முறை விதி அவருக்குக் கை கொடுக்கவில்லை.  அரசியலில் நுழையும் போது மே 13 கலவரத்தில் மூலம் தான் அரசியலுக்குள் நுழைந்தார்.  அதையே தான் இப்போது அரசியலிலிருந்து விரட்டியடிக்கும் போதும் 'கலவரம்'  தான் தனக்குரிய மரியாதை என்று நினைக்கிறார்!  நாடாளுமன்றத்  தேர்தலில் அவருக்கு  போதுமான அடி விழுந்துவிட்டது. ஆனாலும் அது முழுமை அடையவில்லை. சட்டமன்றத் தேர்தலில் அது முழுமை அடையும்

ஆனாலும் நாடு அமைதியாக இருப்பதில் அவருக்கு நாட்டமில்லை. தான் எப்படி கலவரத்தின் மூலம் பதவிக்கு வந்தாரோ போகும் போதும் அப்படியே தான் போக வேண்டும் என்று அவர் நினைக்கிறார்!  ஆனாலும் அப்படி ஒரு தண்டனை அவருக்குக் கிடைக்க வாய்ப்பில்லை. மலேசியர்கள் விழித்துக் கொண்டனர். இந்த இன அரசியலுக்குள் யாரும் விழ தயாராக இல்லை. 

மக்களை அச்சப்படுத்தி,  குழப்பம் விளைவித்து, பயமுறுத்தி அரசியல் விளையாட்டு விளையாடுவதில் மக்கள் தயாராக இல்லை. டாக்டர் மகாதிருக்கும் விளையாடும் வயதில்லை. அவரும் பொறுப்புணர்ந்து  நடந்து கொள்ள வேண்டும்.

நாட்டுப்பற்று என்பதெல்லாம் டாக்டர் மகாதிர் அகராதியில் இல்லை!

No comments:

Post a Comment