Thursday 13 July 2023

அதிகமானோர் வெற்றி!


 

இந்த ஆண்டு எஸ்.டி.பி.எம். தேர்வில் அதிகமானோர் வெற்றி பெற்றிருக்கின்றனர் என்பது நல்ல செய்தி.

தரமான மாணவர்கள் உருவாக்கப் படுகின்றார்கள். பல்கலைக்கழகங்களிலும் தரமான மாணவர்கள் அனுமதிக்கப் படுகின்றார்கள் என்பது வரவேற்கக் கூடிய செய்தி.

இப்படி தரமான மாணவர்களை எஸ்.டி.பி.எம். மூலம் வெளியாகிய வேளையில் இவர்கள் அனைவருக்கும் மேற்கல்வி பெற கல்வி அமைச்சு எந்த வகையில் தயாராக இருக்கிறது என்பது நமக்குத் தெரியவில்லை. 

இந்திய மாணவர்களைப் பொறுத்தவரை இங்கும், பல்கலைக் கழகத்திற்குப்  போக நாம் போராட வேண்டிய சூழலில் தான் இருக்கின்றோம்.  கல்வி அமைச்சு நமக்கு எதனையும் தூக்கிக் கொடுத்து விடுவதில்லை!  கேட்காமல் எதுவும் கிடைக்காது என்பது தான்  இன்றைய நிதர்சனம்.

ஆனால் வருங்காலங்களில் எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு வரும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. தகுதியின் அடிப்படையில் மாணவர்களைச்  சேர்க்கும் முறை வரும் நாள் வெகுதூரத்தில் இல்லை.   வளர்ந்துவிட்ட ஒரு சமூகம் இன்னும் கையேந்துவதை அந்த சமூகமே விரும்பாது. அந்த நாள் வரும் என்பதை எதிர்பார்க்கலாம்.

எஸ்.டி.பி.எம். எடுத்த மாணவர்களில் பலர் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் சேருவதற்கான வாய்ப்பைத் தேடிச் செல்வர்.  வசதி உள்ள மாணவர்கள் வெளிநாடு போக வேண்டும் என்பதற்காகவே எஸ்.டி.பி.எம். தேர்வை எடுக்கின்றனர். 

எஸ்.டி.பி.எம். தேர்வை எடுத்தவர்களில் பலர் வசதியின்மை காரணமாக அத்தோடு கல்வியை நிறுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருப்பார்கள். ஆனாலும் பரவாயில்லை.  எஸ்.பி.எம். கல்வியைவிட எஸ்.டி.பி.எம். கல்வி  இன்னும் உயர்வானது தான்.  வேலை வாய்ப்பை இன்னும் அதிகரிக்கும். ஆனால் மெட் ரிகுலேஷன் கல்வி என்பது உயர்கல்விக்குப் போக வாய்ப்பு அளிக்கும். வேலை வாய்ப்பை அளிக்காது. வேலை சந்தையில் அதற்கு மரியாதை இல்லை!

எப்படியோ தேர்வில் வெற்றி பெற்றவர்களை வாழ்த்துகிறேன். உங்களுக்கு மேல் படிப்பைத் தொடர வாய்ப்புக்  கிடைத்தால்  நமது சமுதாயமே மகிழ்ச்சி அடையும்.  வெளிநாடு படிக்கப் போனாலும் நமக்கு மகிழ்ச்சியே. படித்தது போதும் இனி வேலை தேடுவோம் என்கிற நிலையில் இருந்தாலும் நமக்கு மகிழ்ச்சியே. காரணம் எஸ்.பி.எம். தேர்வை விட அதிகமான தகுதியை வைத்திருக்கிறீர்கள்!

வாழ்த்துகள்!

No comments:

Post a Comment