Tuesday 25 July 2023

தாயில்லாமல் நானில்லை!!

 

பொது இடங்களில்  குழந்தைகள் திடீரென உச்சா போவதும், தீடீரென ஆயி போவதும் புதிது ஒன்றுமல்ல!

இது போன்ற காட்சிகளை நாம் தினசரி பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.  இதனைப் படம் பிடித்து முகநூலில் போடும் போது அது ஏதோ நடக்கக் கூடாதது நடந்து விட்டது போல  வைரல் ஆகி விடுகிறது!

பொது இடங்களில் இப்படி நடப்பது  சரியில்லை என்று தெரிகிறது. இயற்கை உபாதைகளைக் கழிக்க உடனடி இடம் இல்லாத போது எங்கோ ஒரு சிறிய இடம் இருந்தாலும் அதனைப் பயன்படுத்திக் கொள்வது மனித இயல்பு.

அந்தத் தாய் என்ன செய்வது என்று தெரியாமல் தான் அப்படி எளிதான வழியைக் கையாண்டிருக்கிறார்!  பிரச்சனை என்னவென்றால் அந்தத் தாயும்,  இப்படித்தான் அவருடைய தாயும்,   அவரைப் பழக்கப் படுத்தியிருக்கிறார்!  இப்போது இந்தத் தாய் அவருடைய அடுத்த தலைமுறையை  இப்போதே பழக்கப்படுத்துகிறார்!

ஆனாலும் நமது நாட்டில் கழிப்பிடங்கள் நிறையவே இருக்கின்றன. கடைகளில் அந்த வசதிகள் இருக்கின்றன. ஆபத்து அவசரத்திற்கு பொதுவாக எல்லா இடங்களிலும் அந்த வசதிகள் இருக்கின்றன. இந்தத் தாய் குறுக்கு வழியைப் பயன்படுத்தியிருக்கிறார். அவ்வளவு தான்.  இப்போது 'அவசரம்'  யாருக்கு? குழந்தைக்கா அல்லது தாய்க்கா? நமக்கு என்னவோ தாய்க்குத் தான் அவசரம் என்று தோன்றுகிறது!  அதன் காரணமாகத்தான் அருகிலேயே களத்தில் இறங்கிவிட்டார்!

இருந்தாலும் இது போன்ற செயல்கள் வரவேற்கத்தக்கது அல்ல. குழந்தைகளைத் தவறான முறையில் வழி நடத்துகிறோம். அதற்குக் காரணமானவர்களே பெற்றோர்கள் தான்! பொது இடங்களைச் சுத்தமாக வைத்துக் கொள்ளும் பழக்கம் மலேசியரிடையே இன்னும் வரவில்லை. சொல்லிக்கொண்டு தான் இருக்கிறோம். கடைப்பிடிக்க மட்டும் தயங்குகிறோம்.

முன்பெல்லாம் வசதிகள் இல்லை என்று சொல்லி தவறான பழக்க வழக்கங்களைக் கொண்டிருந்தோம். இப்போது அப்படி ஒரு நிலைமை இல்லை. சுத்தம் சுகம் தரும் என்பெதெல்லாம் பள்ளியோடு போயிற்று.  கடைப்பிடிக்கின்ற பழக்கம் தான் இல்லை.

ஆனால் என்ன சொன்னாலும் சரி, பெற்றோர்கள் மட்டுமே, பொறுப்புக்கு உரியவர்கள். வேறு யாரும் அல்ல. பெற்றோர்கள் பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். வருகின்ற தலைமுறை வியாதிகள் இல்லாத  தலைமுறையாக இருக்க வேண்டும்.

சொத்துகள் இல்லாமல் இருக்கலாம் ஆனால் கண்டிப்பாக வியாதியற்ற சமூகமாக வருங்கால தலைமுறை இருக்க வேண்டும்!

No comments:

Post a Comment