Monday 3 July 2023

இது தான் அதிகப்பிரசங்கித்தனம்!

 

ஒரு சிலர் பண்ணுகின்ற அழிச்சாட்டியங்கள்  மூலம் நமது மக்கள் அனைவரையும் முட்டாளாக்கி விடுகின்றனர்!

அதில் ஒன்று தான் சமீபத்தில் அம்பாங் தமிழ்ப்பள்ளியைப் பற்றிய அவதூறு. ஏதோ தெரிந்தவர் போல அவதூறை அள்ளி வீசுகின்றனர். நாமும் அதனை நம்பும்  கட்டாயத்திற்கு உள்ளாக்கிப்படுகின்றோம்.

பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி அறவாரியம் சமீபத்தில் கூட்டிய பத்திரிக்கையாளர் சந்திப்பில் அதற்கான விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.  நாம் அதனைப் புரிந்து கொள்கிறோம்.

பொதுவாக பள்ளிகளில் ஐந்து இஸ்லாமிய மாணவர்கள் கல்வி கற்றால்  அவர்களுக்கான வழிபாட்டுத்தலம் இருக்க வேண்டும் என்பது முதல் நிபந்தனை.

அம்பாங் தமிழ்ப்பள்ளியில் பதினாறு  இஸ்லாமிய மாணவர்கள் கல்வி கற்கிறார்கள். அத்தோடு பள்ளியில் பணிபுரிபவர்களில் ஐந்து பேர் இஸ்லாமியர்கள். ஆக அவர்களுக்கான  வழிபாட்டுத்தலம் என்பது கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளாக நடப்பில் இருந்து கொண்டு இருக்கிறது. இப்போது நடந்தது என்பது கொஞ்சம் சீரமைப்புப் பணிகள். வழிபாட்டுத்தலத்தை  சீரமைத்துக் கொடுத்தது  ஏதோ ஓர் இஸ்லாமிய அமைப்பு. 

இவ்வளவு தான் நடந்த பிரச்சனை. இதற்குத் தான் காது,  மூக்கு வைத்து ஏதோ அதிசயத்தைக் கண்டு பிடித்தது  போல  ஒருவர் டிக்டாக்கில் மார்தட்ட,  வழக்கம் போல  டிக்டாக்கிகள்  அதனை பெரிதுபடுத்த அனைவரும், நான் உள்பட, பொங்கி எழுந்துவிட்டோம்!

இது நாம் அனைவருக்கும் ஒரு பாடம்.  டிக்டாக்கில் பலவாறு பல செய்திகள்  வரும். நாம் தெரிந்து கொள்கிறோம்.  குறிப்பாக நமது தமிழ்ப்பள்ளிகளைப் பற்றி வரும்போது  கொஞ்சம் தெரிந்து கொண்டு, கொஞ்சம் புரிந்து கொண்டு தான் எழுத வேண்டும். 

சராமாரியாக அனைவரையும் குற்றஞ்சாட்டுவதும், சவடால்தனமாக எழுதுவதும் குறைத்துக் கொள்ள வேண்டும்.

அந்த குறிப்பிட்ட செய்தியை வெளிபடுத்திய நண்பர் அதனை டிக்டாக்கில் போடுவதற்கு முன்பு, நேரடியாக பார்த்த அந்த நண்பர்,  அதனை பள்ளியில் விசாரித்திருக்கலாம். அவர் தெளிவு பெற்றிருப்பார். எந்தவொரு பிரச்சனையும் எழுந்திருக்காது.

நண்பர்களே!  எதை எழுத வேண்டும், எதை எழுதக் கூடாது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். அதிகப்பிரசங்கித்தனம் வேண்டாம்!

No comments:

Post a Comment