Saturday 13 August 2022

நாம் தோற்றிடுவோம்! பயமாயிருக்கு!


 "ஐயோ! பொதுத் தேர்தலை உடனே நடத்துலேனா நாங்க தோத்துப் போவோம்! உடனே நடத்துங்க!"

இது தான் அம்னோ கட்சியில் உள்ள ஒரு  தரப்பினரின் அபயக்குரல்!  அந்தக் கட்சியின் இன்னொரு தரப்பு அதனை விரும்பவில்லை.  "உடனே!" என்று சொல்லுகின்ற தரப்பு, தப்பு செய்துவிட்டு நீதிமன்ற வழக்குகளில்  மாட்டிக் கொண்டிருக்கும் தரப்பு!

அம்னோ பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று விட்டால் நீதிமன்ற வழக்குகளைப்பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை! நீதி தமது கைக்கு வந்துவிடும்! 

இன்னொரு தரப்பு  அம்னோ கட்சி பல மலாய்ப் பெரியவர்களால் வளர்க்கப்பட்ட ஒரு கட்சி. அதன் நோக்கம் மலாய்க்காரர்களை முன்னேற்றுவது.  ஊழல் செய்யும் அரசியல்வாதிகளால்  அதன் நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை.  மலாய்க்கரர்களின் முன்னேற்றத்திற்கு ஊழல்வாதிகளான இவர்கள் தான்  தடையாக இருக்கின்றனர்! 

கல்வியில் மாபெரும் முன்னேற்றம் என்றாலும் இன்னும் "தூக்கிவிடுகின்ற"  போக்குத்  தான் நிலவுகிறது என்பதில் ஐயமில்லை.  சமீபத்திய மெட்ரிகுலேசன் வரை இன்னும் தகுதி அடிப்படையில் தெர்ந்தெடுக்கப்படுவதில்லை!   ஏதோதோ பெயரில் அவர்களுக்கு இடம் ஒதுக்கப்படுகிறது என்கிற குற்றச்சாட்டு இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது!

இதற்கெல்லாம் யார் காரணம்? ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் தான் காரணம் என்பது தான் குற்றச்சாட்டு! ஊழல்வாதிகள் பிழைப்பு நடத்த இத்தகைய "ஊழல்" போக்கைக் கல்வியிலும் கைவைக்கின்றனர்! மாணவர்களின் எதிர்காலத்தைவிட  ஊழல்வாதிகளின் எதிர்காலமே முக்கியம் என்பதாக அவர்கள் நினைக்கின்றனர்! 

ஊழல்வாதிகளால் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன?  எல்லாத்துறைகளிலும் ஊழல்கள் ஏற்பட்டுவிட்டன! "தலைவர்கள் செய்கிறார்கள்! நாங்களும் செய்கிறோம்!" என்கிற போக்கு அதிகமாக நிலவுகிறது!

சமயம் என்று ஒன்றிருந்தே இந்த அளவுக்கு ஊழல்கள் என்றால் சமயம் என்கிற ஒருபாடமே இல்லையென்றால் நாட்டின் நிலைமை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்க்க முடியவில்லை!

நம்மிடம் கேட்டால் அரசியல்வாதிகள் எந்த ஒரு காரணத்திற்காக அரசியலுக்கு வந்தார்களோ அந்த ஒரு காரணமே  அவர்கள்  வெற்றி பெற போதுமானது. மக்களுக்குத் தொண்டு செய்ய வந்தவர்கள் தானே?  பின்னர் மக்களை மறந்துவிட்டு அவர்களின் குடும்பத்திற்குத் தொண்டு செய்யப் போனது அவர்கள் குற்றம் தானே!

மக்களுக்குத் தொண்டு செய்ய வந்தவர்கள் இப்போது பாதை மாறிப்போய்  "நாங்கள் வெற்றி பெற வேண்டும்! தேர்தலை வையுங்கள்!" என்று குத்தாட்டம் போட்டால் யாரைக் குற்றம் சொல்லுவது?

பாதை மாறிப்போன நீங்கள் தேர்தலில் தோற்றுப் போனால் நமக்குச் சந்தோஷமே!



No comments:

Post a Comment