Thursday 11 August 2022

தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு!


 எஸ்.டி.பி.எம். பரிட்சை முடிவுகள் இன்று (18.8.22) வெளியாகிருக்கின்றன.

வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் நமது வாழ்த்துகளும்  பாராட்டுகளும். அதிலும்,  சிறப்பான தேர்ச்சி பெற்றவர்களுக்கு மேலுமொரு கூடுதலான பாராட்டு.

எஸ்.டி.பி.எம். படிக்கின்ற மாணவர்களுக்கு இருப்பதெல்லாம் ஒரே இலட்சியம் தான். அவர்கள் நோக்கம் பல்கலைக்கழகம் போவது மட்டும் தான். வேறு காரணங்களுக்காக அவர்கள் எஸ்.டி.பி.எம். படிக்கப் போவதில்லை. 

ஒரு காலகட்டத்தில் எஸ்.டி.பி.எம். படித்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புக்கள் இருந்தன. குறைவான பல்கலைக்கழக பட்டதாரிகள் இருந்த அந்த காலகட்டத்தில் இவர்கள் தான் பட்டதாரிகளின் இடத்தை நிரப்பினர். அதன் கல்வித்தரமும் அதிகம். வெற்றி பெறுவது சுலபமல்ல. இப்போதும் அதன் தரம் அதிகம்  தான் என்றும் சொல்லுகிறார்கள். அதனால் தான் மலாய் மாணவர்கள் மெட்ரிகுலேஷன்  கல்விக்குப் போட்டிப் போடுவதாக சொல்லப்படுகிறது.

மெட்ரிகுலேஷன் படித்துவிட்டு வெளியேற வேண்டுமென்றால்  வெளியேறலாம்.  வேலைவாய்ப்புகளுக்கு  அந்த சான்றிதழ் எடுபடாது. அது குப்பையாகத்தான் பயன்படும். ஆனால் எஸ்.டி.பி.எம். தேர்வு என்பது அப்படியல்ல. அதற்கான மரியாதை இன்னும் உண்டு. வேலை வாய்ப்புகளும் கிடைக்கும். ஆனால் மாணவர்கள் தங்கள் கல்வியைத் தொடர வேண்டும் என்று தான் நினைப்பார்கள். வேலைக்குப் போக வேண்டும் என்கிற நிலைமையில் அவர்கள் இருந்தால் எஸ்.டி.பி.எம். படிக்கும் தேவையே ஏற்பட்டிருக்காது.

இந்த ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களில் சுமார்  67% (விழுக்காடு) B40  எனப்படும் வசதி குறைந்த குடும்பங்களிலிருந்து வந்த மாணவர்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவர்களை  நாம் வாழ்த்தியே ஆக வேண்டும். 

மீதம் 33% விழுக்காடு மாணவர்களில் பலர் வெளிநாடுகளில் படிக்க ஏற்பாடுகள் நடந்திருக்கும்.  இன்னும் பலர் உள்நாட்டுத் தனியார் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து விடுவார்கள். வசதி உள்ளவர்கள் தேர்ந்தெடுப்பதற்கு எத்தனையோ வழிகள் உள்ளன. 

வசதி இல்லாத மாணவர்கள் தான் சிரமத்தை எதிர்நோக்க வேண்டி வரும். அரசாங்கப்  பல்கலைக்கழகங்கள்  கைவிரித்தால் தனியார் ப'கழகங்கள் தான் கைகொடுக்கும். செலவுகள் அதிகமாகத்தான் இருக்கும்.  கடனோ உடனோ வாங்கித் தான் பெற்றோர்கள் பிள்ளைகளின் இலட்சியத்தை நிறைவேற்ற வேண்டும்.  அல்லது நிறையவே கல்வி கடனுதவிகள், இலவச கல்வி உதவிதொகை - இப்படி உதவிகள் கிடைக்கின்றன.

ஆனாலும் மாணவர்கள் தங்கள் கல்வியைத் தொடர வாய்ப்புக்கள் நிறையவே  இருக்கின்றன. கதவுகள் இழுத்து மூடப்படவில்லை. மூடியிருந்தால் தட்டுங்கள்! மீண்டும் மீண்டும் தட்டுங்கள்!

வெற்றிபெற வாழ்த்துகள்!


No comments:

Post a Comment