Saturday 6 August 2022

அட! நீயும் மனிதனா?

 

இந்த காட்சியைப் பார்க்கம் போது  "அட மடையா! நீயும் மனிதனா?"  என்று பாடத் தோன்றுகிறது!

பசு மாடுகளை நாம் ஏதோ ஒரு மிருகமாகப் பார்ப்பதில்லை. விவசாயிகளுக்கு அதன் அருமை தெரியும்.  மாடுகள் சாதுவான பிராணிகள். அதனைத் துன்புறுத்துவது  என்பது மிக மிகக் கேவலமான ஒரு செயல்.

சமீபகாலமாக மலேசியரிடையே ஏனோ வன்மம் தலைவிரித்தாடுகிறது என்று தான் சொல்ல வேண்டும். வளர்ப்புப் பிராணிகள் படாதபாடுகளை அனுபவிக்கின்றன.

நாய்களை அடித்துக் கொல்கிறார்கள். கார்களின் பின்னால் வைத்து இழுத்துச் செல்லுகிறார்கள். பூனைகளை  துணி துவைக்கும் இயந்திரங்களில்  உள்ளே போட்டு அரைத்து விடுகிறார்கள். இதோ, இப்போது ஒரு காட்சியைப் பார்க்கிறோம். மாட்டின் வாலைப் பிடித்து இழுத்து செல்லுகிறார்கள். அது என்ன அவ்வளவு எளிதான காரியமா?  அதனை அடித்து, துன்புறுத்தி லாரியில் ஏற்றியதாகச் சொல்கிறார்கள்.

பசுக்கள் என்ன அத்தனை கொடூரமான பிராணிகளா? அதுவும் அந்த இரண்டு மாடுகளும் சினை மாடுகள் என்கிறார்கள். அவர்கள் அரசாங்க ஊழியர்கள் என்றால் அவர்களுக்கு என்ன இரண்டு கொம்புகள் முளைத்திருக்கிறதா?  நடவடிக்கை என்பது அந்த மாடுகளை வளர்ப்பவர்கள் மேல் எடுத்திருக்க வேண்டும். அந்த மாடுகளைத் துன்புறுத்துவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

சிங்கப்பூரில்  வீதிகளில் குப்பை போடக்கூடாது என்கிறார்கள். அதனை நூறு விழுக்காடு மக்கள் பின்பற்றுகிறார்கள். நம் நாட்டில் மாடுகளை வீதிகளில் சுற்றவிடக்  கூடாது என்றால்  ஏன் அதனைச் செயல்படுத்த முடியவில்லை? குற்றம் யார் மீது? அரசாங்கத்தின் மீது தான். ஒரு சிறு கடுதாசியை வீதிகளில் போடப்  பயப்படுகிறான் சிங்கப்பூரில். ஆனால் இங்கோ ஒரு மாடு வீதிகளில் சுற்றுவதை தடுக்க முடியவில்லை. அந்த அரசாங்கத்தால் முடியும் போது  இந்த அரசாங்கத்தால் முடியவில்லை!

ஆமாம், நமது நாட்டில் எதுவுமே முறையாகக் கடைப்பிடிக்கப் படுவதில்லை என்பது தான் காரணம். இங்கு எதனைச் செய்தாலும் 'யார் அவர்?' என்பது தான் முதல் கேள்வியாக இருக்கிறது! அவர் மலேசியர் என்பது முன்னிறுத்தப்படுவதில்லை. அது தான் பிரச்சனை.

இப்போது இந்த மாடுகளுக்கு ஏற்பட்ட  இந்த கொடூரத்தை வைத்துப் பார்க்கும் போது  இந்த மாடுகள் நிச்சயமாக இந்தியர் ஒருவருக்குச் சொந்தமான  மாடுகளாகத்தான்  இருக்க வேண்டும். இப்படித்தான் ஒவ்வொரு விஷயத்திலும் "சம்பந்தப்பட்டவர் யார்?" என்று பார்க்கிறார்களே தவிர சரி, தவறு, நீதி, நியாயம் என்று பார்ப்பதில்லை! இது தான் நம் நாட்டில் உள்ள பிரச்சனை.

இந்த கொடூர செயல்களைப் புரிந்த அந்த மாநகர் மன்ற ஊழியர்களுக்கு  நிச்சயமாக ஏதேனும் தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும். இவர்கள் செய்த செயல்களுக்குச் சட்டம் நிச்சயம் எதிராகத்தான் இருக்கும்.

அவர்களுக்குத் தண்டனைக் கொடுக்கப்பட வேண்டும் என்பதே நமது கோரிக்கை!

No comments:

Post a Comment