Wednesday 31 August 2022

தலைவர் சொல்லுவது சரியா?

 

பாஸ் கட்சியின் தலைவர், அப்துல் ஹாடி அவாங் ஒரு குற்றச்சாட்டைச் சுமத்தியிருக்கிறார்.

அதாவது, நாட்டில் இலஞ்சம் பரவலாக இருப்பதற்கு, முஸ்லிம் அல்லாதவர்களே காரணம் என்பதாக அவர் கூறியிருக்கிறார். அவர் அப்படி ஒரு குற்றச்சாட்டை வைப்பதற்குக் காரணம் கிளந்தான், திரெங்கானு போன்ற பாஸ் கட்சி ஆளுகின்ற,  அத்தோடு மலாய்க்காரர் அதிகம் உள்ள, அந்த இரண்டு மாநிலங்களிலும்  இலஞ்சம் இல்லை என்று அவர் சொல்லுவதாகவே எடுத்துக் கொள்ளலாம். அந்த மாநிலங்களைப் பற்றி அவர் அதிகம் அறிந்தவர்.  அதனால் அவர் சொல்லுவது சரியாகவும் இருக்கலாம்.

அவர் மத ரீதியாகவே  பேசியிருக்கிறார். அதாவது   கிறிஸ்துவர்கள், புத்த மதத்தினர், இந்துக்கள், சீக்கியர் இப்படி இஸ்லாம் அல்லாதவரே இலஞ்சத்திற்குக் காராணமானவர்கள் என்பது தான் அவரின் கருத்து. அவர் சொல்ல வருவது  இஸ்லாமியர்களைத்  தவிர்த்து  பிற மதத்தினருக்குப் போதுமான சமயக்கல்வி என்று ஒன்று இல்லாததால் அவர்களால் எளிதாக இலஞ்சத்தைக் கொடுக்க முடிகிறது. இலஞ்சத்தை அனுமதிக்க முடிகிறது. இலஞ்சத்தைப் பரவலாக்க முடிகிறது என்பது தான் அவரின் குற்றச்சாட்டின் சுருக்கம். ஒரு வேளை நீதிமன்றத்தால் நஜிப் ரசாக் குற்றவாளி என்று கூறப்பட்டதால்  அவருக்கு உடனடியாக நஜிப்பின் குருவாக இருந்த  ஜோ லோ,  ஹாடிக்கு நினைவுக்கு வந்திருக்கலாம்!

ஆனால் ஒன்றை ஹாடி நினைவு கொள்ள வேண்டும்.  சமயம் அறியாத பிற மதத்தினர் இலஞ்சம் கொடுத்தார்கள் அதனைச் சமயம் அறிந்தவர்கள் பெற்றுக் கொண்டார்கள் என்பதும் உண்மை தான். இதில் எது நியாயம் என்பது நமக்கும் கேள்விக் குறியே! சமயம் அறியாதவர்களைவிட சமயம் அறிந்தவர்கள் "பெற்றுக்கொண்ட" அதைக் குற்றம் அல்ல என்று ஹாடி சொல்ல வருகிறாரா?

ஹாடி போன்ற தலைவர்கள் இலஞ்சத்தை சமயத்தோடு ஒப்பிடக் கூடாது என்பது தான் நாம் அவருக்குச் சொல்ல வேண்டிய நிலையில் இருக்கிறோம். நமது அண்டை நாடான சிங்கப்பூரில் இலஞ்சம் பெரிய அளவில் இல்லாததற்குச்  சமயம் காரணமென்றால் அதற்காகப் பாராட்டப்பட வேண்டியவர்கள் புத்தமதத்தினர். அவர்களின் எண்ணிக்கைதான் அங்கு அதிகம். அதனால் புத்தமத்தினர் அல்லாதவர்கள் தான் இலஞ்சத்திற்குக் காரணம் என்று சொல்ல முடியுமா அங்கு சமயம் என்பதே ஒரு பாடமாக பள்ளிகளில் இல்லை. வேறு என்ன சொல்ல?

பாஸ் கட்சியின் தலைவர் ஹாடி அவாங் ஓர் உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். சிங்கப்பூரில் இலஞ்சம் வாங்கினால் கடும் சட்டங்கள் இருக்கின்றன. நமது நாட்டில் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.  தவறு செய்தவன் எந்தக் கட்சியைச் சேர்ந்தவன், எந்த இனத்தைச் சேர்ந்தவன், பணக்காரனா ஏழையா, அரசியல்வாதியா அவனது மகனா, மகளா - இப்படி எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்த பிறகு தான் குற்றம் சாட்டப்படும் ஒரு நாட்டில் இலஞ்சம் இருக்கத்தான் செய்யும்.

இலஞ்சம் சமயத்தைப் பார்ப்பதில்லை! பணத்தைத் தான் பார்க்கும்!

No comments:

Post a Comment